Wednesday, June 17, 2009

கண்ணீர்த்துளிகள்

அண்ணாந்து பார்க்கும்
அடுக்கு மாடிக் கட்டிடம்
ஆறு அண்ணாக்களின் தங்கை
என்தேவைகளை பூர்த்தி செய்யும்
என் உயிரான அம்மா அப்பா

தேவையே இல்லாமல்
தேவைகள் என்று எனக்கு
தேவையில்லாமல் வாங்கித்தரும்
என் அன்பு அண்ணாக்கள்

கவலையே என்ன என்று
தெரியாத காலங்கள்
என் கண்களில் இருந்து
ஆனந்தக் கண்ணீரைத் தவிர
அழுகைக்கண்ணீர் வந்ததேயில்லை
வெளிநாட்டின் மோகம்
என்னை தாகம் ஆக்கியது

வேகமாக வெளி நாடுவந்தேன்
என் உழைப்பால் உப்புப் போட்டு
உண்பதற்கு வேலை தேடினேன்
வீட்டிற்குள் மலசல கூடம்
இருக்க விரும்பாத நான்
இன்று மலசலகூடம் கழுவி
என் வயிற்றை ஆற்ற
உப்பைப் போட்டு
உண்பதற்கு உட்கார்ந்தேன்.

என்கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
சோற்றுக்குள் சிந்தி
சோறு உப்பானது.

என் சொந்த மண்ணை
மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும் என் சோற்றுக்குள்
கண்ணீர்த் துளிகள்.

1 comment:

  1. பசுங்கிளி
    இது போல் எத்தனை பேர் சோற்றுக்கு உப்பாகக் கண்ணீரினை சிந்தி வருகின்றனரோ.
    வெளி நாட்டு மோகம் எத்தனை பேரை இப்படி ஆட்டுவிக்கிறதோ.
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete