Friday, June 19, 2009

வித்தியாசமான அணுகுமுறை

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான்.

தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான்.

அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் இட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான்.

அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர்.

தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்றறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன்.

பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும்.

அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.

"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

"இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை"

சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள்.

ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள்.

சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான்.

ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.

நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.

இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :

* மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

* உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.

* எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

வெற்றியின் ரகசியம் !!!

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும்.

ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.

கனவு காணுங்கள் – அப்துல் கலாம்

கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல,
உங்களை தூங்க விடாமல் செய்வது தான் அது!

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்துகொள்!

வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
உன்னைக் கொன்றுவிடும்.
கண்ணைத் திறந்து பார்;
காணாமல் போய்விடும்!

வாழ்க்கை

வாழ்க்கை ஆண்டவன்
கொடுத்த வரப்பிரசாதம்
நல்லவனாக வல்லவனாக
வாழ்ந்துகாட்டு

வாழ்க்கை ஒரு
உல்லாசப்படகு
அதில் இனிமையாக
பயணம் செய்

வாழ்க்கை ஒரு
கடமை
அதனை நிறைவாக
செய்து முடி

வாழ்க்கை ஒரு
மைதானம்
அதில் விளையாடி
வெற்றி கொள்

வாழ்க்கை ஒரு
போராட்டம்
எதிர்நீச்சல் போட்டு
உயர்ந்து நில்

வாழ்க்கை
விலைமதிப்பற்றது
வீணாக்கி விடாதே
இறுகப் பற்றிக்கொள்

யாருக்கு தெரியும்

யாரோடு யாருக்கு
எப்போது காதல் வரும்
யாருக்கு தெரியும்?

எந்த மோதல் காதலாகும்
எந்த காதல் மோதலாகும்
யாருக்கு தெரியும்?

யாருக்காக யார் பிறந்தார்
எங்கே இருக்கின்றார்
யாருக்கு தெரியும்?

பெண் மனதில்
உள்ளதென்ன
யாருக்கு தெரியும்?

பிறந்த தினம் தெரிந்தவர்க்கு
இறக்கும் தினம்
யாருக்கு தெரியும்?

கருவில் வளரும் பிள்ளை
கறுப்பா சிகப்பா
யாருக்கு தெரியும்?

வாழ்க்கை பயணம்
நலமா போர்க்களமா
யாருக்கு தெரியும்?

எல்லாம் தெரிந்தவன்
மேலிருந்து சிரிக்கின்றான்
ஏதும் தெரியாதவன்
கீழிருந்து தவிக்கின்றான்

மண்ணின் மகிமை.

வெளிநாட்டு மோகத்துக்கு
ஆசைப்பட்டதனால்
இன்று............
அவதிப்படுகிறாய்....!
அந்நிய மண்ணில்
அகதி என்ற பெயரோடு
ஊன் உறக்கமின்றி
கடும் குளிரிலும்
தினமும் இயந்திரமாய்
வேலை செய்யும் போதாவது
பிறந்ந மண்ணின்
மகிமையை உணர்ந்துகொள்கிறாயா.......?

Wednesday, June 17, 2009

கண்ணீர்த்துளிகள்

அண்ணாந்து பார்க்கும்
அடுக்கு மாடிக் கட்டிடம்
ஆறு அண்ணாக்களின் தங்கை
என்தேவைகளை பூர்த்தி செய்யும்
என் உயிரான அம்மா அப்பா

தேவையே இல்லாமல்
தேவைகள் என்று எனக்கு
தேவையில்லாமல் வாங்கித்தரும்
என் அன்பு அண்ணாக்கள்

கவலையே என்ன என்று
தெரியாத காலங்கள்
என் கண்களில் இருந்து
ஆனந்தக் கண்ணீரைத் தவிர
அழுகைக்கண்ணீர் வந்ததேயில்லை
வெளிநாட்டின் மோகம்
என்னை தாகம் ஆக்கியது

வேகமாக வெளி நாடுவந்தேன்
என் உழைப்பால் உப்புப் போட்டு
உண்பதற்கு வேலை தேடினேன்
வீட்டிற்குள் மலசல கூடம்
இருக்க விரும்பாத நான்
இன்று மலசலகூடம் கழுவி
என் வயிற்றை ஆற்ற
உப்பைப் போட்டு
உண்பதற்கு உட்கார்ந்தேன்.

என்கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
சோற்றுக்குள் சிந்தி
சோறு உப்பானது.

என் சொந்த மண்ணை
மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும் என் சோற்றுக்குள்
கண்ணீர்த் துளிகள்.

குறியீடு

மயிலிறகு இருந்த
உன் புத்தகத்தில்
ரகசியமாய்
என் காதலைச் சொன்னேன்
குறியீடாக – 143
கடைசிவரை அது
ரகசியக் குறியீடாகவே
இருந்துவிட்டது....
பிறந்தநாள்
என் பெற்றோரின் பிறந்தநாளைக் கூட
திடீரெனக் கேட்டால் எனக்கு
சொல்லத்தெரியாது!
நான் தூங்கும்போது எழுப்பிக் கேட்டால்க் கூட
பிசகாமல் சொல்வேன்
உன் பிறந்தநாள் எப்போதென்று!
என் இதயத்தில் கலந்தவள் அல்லவா நீ
தூங்கும்போதும் இதயம் துடிக்குமே!

Tuesday, June 16, 2009

” நானும் கடவுள் குடியிருக்கும் வீடு தான் ”

வாரியார் நெற்றியில் திருநீறு இடுவதை பார்த்த ஒரு சிறுவன்
” சாமியார் நெற்றியில வெள்ளை அடிக்கிறாரு டோய் ” என்று கேலி செய்தான்.

அதை கேட்ட வாரியார், ” தம்பி இங்கே வா. வெள்ளை, வீட்டுக்கு அடிப்பாங்களா அல்லது குட்டி சுவருக்கு அடிப்பாங்களா? ” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

” வீட்டுக்கு தான் அடிப்பாங்க. “

நான் என்னுடய உடம்பை கடவுள் குடியிருக்கும் வீடாக நினைப்பதால் , வெள்ளை அடிக்கிறேன் . நீயும் அப்படி நினைத்தால் வெள்ளை அடித்துக்கொள் . எப்படி ?” என்றார்.

” நானும் கடவுள் குடியிருக்கும் வீடு தான் ” என்று திருநீறு பூசிக் கொண்டானாம் அந்த சிறுவன்.

பேராசைக்கு அழிவே முடிவு

விவசாயி ஒருவன் சரியான வருமானம் இல்லாமல் ஏழையாக இருந்தான். அவனுக்கு சீக்கிரமாக பணக்காரனாக வேண்டுமென்று ஆசை. எனவே ஒரு முனிவரைச் சந்திக்கச் சென்றான்.

அவரிடம், "சுவாமி! விவசாயத்தில் அதிக வருமானமில்லை. ஒரே நாளில் பணக்காரனாக ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.

அவனது நிலையை உணர்ந்த முனிவர் ஒரு பூதத்தை வரவழைத்து, "இந்த பூதத்திற்கு எந்த நேரமும் வேலை கொடுத்துக் கொண்டே இரு. விரைவில் பணக்காரனாகி விடுவாய். ஆனால், வேலை கொடுப்பதை நிறுத்தினால் இந்த பூதம் உன்னையே விழுங்கிவிடும். கவனமாயிரு." என்றார்.

அவனோ குளிர்ந்து போனான். விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற பேராசையில், "சுவாமி! வேலை செய்வதுதான் கஷ்டம். வேலை வாங்குவது மிகவும் எளிது." என்று சொல்லி பூதத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

முதல் வேலையாக பூதத்திடம், "நான் தங்குவதற்கு ஒரு பெரிய வீடு கட்டு" என்றான். பூதமோ அந்த இடத்தில் ஒரே நிமிடத்தில் பெரிய மாளிகையையே கட்டிவிட்டது.

அடுத்து, "தங்கச்சுரங்கத்திற்குச் சென்று தங்கத்தை அள்ளி வா!" என்றான். அது நூறு மூட்டை தங்கத்தை நொடியில் சுமந்து கொண்டு வந்து போட்டு விட்டது.

விவசாயிக்குத் தங்கத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி. இருந்தாலும் தான் சொல்லும் வேலைகளை உடனடியாகச் செய்து விடுகிறதே. அடுத்து வேலை கொடுக்காமல் விட்டால் தன்னைக் கொன்று விடுமே என்கிற பயமும் வந்துவிட்டது.

பின் அருகிலிருந்த காட்டை அழித்து அரண்மனையை எழுப்பு என்றான். அதுவும் சில நிமிடங்களில் காட்டை அழித்து அரண்மனையை அமைத்து விட்டது.

விவசாயிக்கு அடுத்து பூதத்திற்கு என்ன வேலையைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

வேலை கொடுக்காததால் அந்த பூதம் அவனை விழுங்க வந்தது.

விவசாயி அலறியடித்துக் கொண்டு முனிவரைத் தேடி ஓடினான்.

"சுவாமி இந்த பூதத்தைக் கட்டி வையுங்கள். இல்லாவிட்டால் என்னை விழுங்கிவிடும்." என்று பயத்தில் கதறினான்.

முனிவர் அவனிடம் சிரித்துக் கொண்டே, "அடேய் இதற்காகவா பயப்படுகிறாய். அதோ அந்த நாயின் வாலை நிமிர்த்தச் சொல்லி பூதத்திற்கு உத்தரவிடு." என்றார்.

அவனும் பூதத்திடம் அப்படியே சொன்னான்.

பூதம் நாயின் வாலை நிமிர்த்த முயன்று பார்த்தது. கடைசியில் அது தோற்றுப் போனது. முடிவில் களைத்துப் போன பூதம், "என்னை விட்டு விடுங்கள். நான் தந்த செல்வத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்று சொல்லிவிட்டு ஓடியது.

முனிவர் அவனிடம், "பேராசை கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் இப்படி விபரீதமான முடிவைத்தான் சந்திக்க நேரிடும். அதை அறிவால் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் அழிவு முடிவாகிவிடும்" என்றார்.

Monday, June 15, 2009

"இந்தத் தமிழ் இனியும் வளரும்...."

100 வது பதிவு
இதுவரை வந்து உற்சாக மூட்டிய, பார்வை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்!

இந்திய மாநிலங்களில் இரண்டின் அதிகாரப் பூர்வ ஆட்சிமொழி!. இந்திய எல்லையைத் தாண்டி, கடல் கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் எனப் பல்வேறு நாடுகளிலும் அந்நாடுகளின் தேசிய மொழியாய் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இந்திய மொழி!

கால மாற்றங்கள், சமய மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எத்தனையோ மாற்றங்கள் வந்த போதும், காலச் சூழலுக்கேற்ப ஈடு கொடுத்து இன்றைக்கும் உலகம் முழுக்க பத்துக் கோடிக்கும் மிகையானவர்களால் உச்சரிக்கப்பட்டு பன்னாட்டு மொழியாய் நீடூழி, நிலைத்து உலா வந்து கொண்டிருக்கும் உன்னத மொழி 'தமிழ்' என எத்தனையெத்தனை அடைமொழி கொடுத்தாலும் குறைவே!


இத்தகைய சிறப்புகளைப் பெற்ற சிறந்த மொழிக்குச் சொந்தக்காரகள் நாம் என எண்ணும் போது மகாகவி பாரதியின் " செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!" என்னும் பாடலின் வரிகள் நம் செவிகளில் ரீங்காரமிடுவதை நம்மால் உணராமல் இருக்க முடியாது.


உலகத்திலேயே மிகையாய்த் தமிழர்கள் வாழும் தமிழகத்தின் ஆரம்பக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியில் கல்வி போதித்திடல் வேண்டும் எனத் தமிழக அரசு சட்டம் இயற்றியதை எதிர்த்துத் தமிழர்களே நீதிமன்றம் சென்று தடை வாங்கி வழக்கு நிலுவையிலிருக்கும் அதிசயம் உலகின் வேறெந்த நாட்டிலும் நம்மால் காண முடியாது. தமிழகத்தில் பிறந்து,

தமிழகத்திலேயே வளர்ந்து, படித்து ஆளாகிவிட்ட நிலையில் ஆங்கிலம் பேசுவதே உயர்வு, ஆங்கிலம் பேசுவதே நாகரிகம் என்னும் தாழ்வு மனப்பான்மை மனநோயால் பீடிக்கப்பட்டுத் தங்களின் சுயம் இழக்கும் நிலையில் கோடிக்கணக்கான தமிழர்கள் இன்றைக்கும் பெரும்பான்மையாய் இருப்பதைக் கண்டு நம் இதயம் விம்முகிறது, விழிகள் அருவிகளாகின்றன, வேதனை நம்மை வாட்டுகின்றது.

அகிலமே வியக்கும் வண்ணம் இன்றையக் கணினியுகத்தில் நம்நாடு அறிவியல் முன்னேற்றம் கண்டு சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் தாய்மொழி தமிழை மறக்காமல் தமிழில் பல்வேறு எழுத்துருக்களையும், மென் பொருட்களையும் உருவாக்கி காலச் சூழலுக்கேற்ப தமிழை உயர்த்திச் சேவை செய்து வரும் தமிழர்கள் எட்டுத் திக்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெருமையால் நம் உள்ளம் பூரிக்கின்றது, புளகாங்கிதம் கொள்கின்றது.

திரவியம் தேடி திசையெட்டுச் சென்றிட்டாலும், தாயகத்தையும் தாய் மொழியையும் மறவாது தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்யும் தமிழ் வேட்கை மிக்கவர்கள் எத்திசையிலிருந்தாலும், அவர்களைப் போற்றிட, வாழ்த்திட உள்ளம் துடிக்கின்றது, மெய் சிலிர்க்கின்றது, பேருவகை பூரித்தெழுகின்றது. இனிய தமிழ் இனி வையம் உள்ள மட்டும் இனிதே வாழும் என்னும் நம்பிக்கை ஒளிர்கின்றது.

இந்த இனிமைத் தமிழ் இனியும் வளரும்....வாழும்....

சிரிப்பு

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. இன்று எம்மில் எத்தனை பேர் வாய் விட்டுச் சிரிக்கின்றோம் என கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சிரிப்பு என்பது ஆண்டவன் எமக்கு வழங்கி இருக்கும் அருட் கொடைகளுள் ஒன்றாகும். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் சிரிக்கத் தெரிந்த பிராணி மனிதன் மட்டும்தான் என்பது எவ்வளவு அற்புதமான படைப்பு.

சிரிப்பு ஒரு மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றது, உடல், உணர்வு ரீதியாக அவனை உற்சாகப்படுத்துகின்றது. வள்ளுவர் ""இடுக்கண் வருங்கால் நகுக'' என்கின்றார். துன்பம் வரும் வேளையில் கூட சிரியுங்கள். அத் துன்பம் எல்லாம் எமக்கு ஒரு தூசியாய் தெரியும். சிரிப்பு எம்மிடம் இருக்கும் இயற்கையான ஒரு கை மருந்து. இதன் மூலமே பல நோய்கள் பறந்தோடி விடும். அதைவிடுத்து நாம் நவீன ரக செயற்கையான மருந்துகளை அல்லவா தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு மனிதன் தன்னை மறந்து சிரிக்கும் போது அவனது ஆயுளும் கூடுகின்றது. அழகும் மிளிர்கின்றது. சிலரது சிரிப்பை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இலகுவில் ஊகித்தும் விடலாம். அந்த வகையில் கண் பார்த்து சிரிப்பவன் காரியவாதி, ஓட விட்டுச் சிரிப்பவன் கயவன், போக விட்டுச் சிரிப்பவன் குள்ளன், ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன், துன்பத்தில் சிரிப்பவன் தான் மனிதன் என்கின்றார்கள்.

சிரிப்பு மனிதனுக்கு இருக்கும் சிறப்பு அம்சம். ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் கண்ணாடிக்கு முன்னால் நின்று உங்களையே நீங்கள் பார்த்து, ரசித்து புகழ்ந்து சிரித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் வரும். உங்களை அழகுபடுத்துவதற்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது, உங்களை அலங்கரிக்க பொன் நகைகளும் தேவைப்படாது.

ஒரு புன்னகையே போதும். இந்த உலகையும், மற்றவரையும் தம்வசப்படுத்தி விட என்றால் சிரிப்பிற்கு இருக்கும் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிகின்றதல்லவா? சிரிப்பதற்கு தயக்கம் காட்டக்கூடாது.

என்ன சிரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா என யோசிக்க வேண்டாம். சிரிக்கத் தெரிந்த மிருகத்திற்குத்தான் மனிதன் என்று பெயர். சிரிக்க மறந்த மனிதனுக்கோ மிருகம் என்று பெயர்

Friday, June 12, 2009

பெரியவர்களுக்கு முடி நரைப்பது ஏன்?

ஒரு நாள் அப்பாவிடம் வந்த ராமு, இப்படி கேட்டான். "பெரியவங்களுக்கு எல்லாம் முடி நரைக்கிறதே, ஏம்பா?"

"
ஒன்ன மாதிரி உருப்படாத பிள்ளைகளை பெத்தா, அப்படித்தான் முடி நரைக்கும்" எரிச்சலில் சொன்னார் அப்பா.

"
ஓஹோ, அதனால்தான் தாத்தாவுக்கு அவ்ளோ முடியும் நரைச்சுப்போச்சா" என்று கூறியபடி ஆதங்கத்துடன் அவன் நடையை கட்ட, நொந்து போனார் அப்பா.

இப்படி அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாக்கள் நிறைய வீடுகளில் உண்டு. சில சமயம் அப்பாக்கள் மீதான வெறுப்பை சரியான தருணம் பார்த்து உறவினர்களிடம் போட்டுக்கொடுக்கும் மகன்களும் உண்டு.

ஒருமுறை, வீட்டுக்கு வந்த தனது அலுவலக நண்பரிடம் வீட்டில் உள்ள தனது அதிகாரம் பற்றி 'கைப்புள்ள' வடிவேலு ரேஞ்சுக்கு 'பில்ட் அப்' செய்து பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

"
பொண்டாட்டி, புள்ளைங்கள எல்லாம் எப்பவுமே நம்ம கட்டுப்பாட்டுல் வெச்சிருக்கணும். நானெல்லாம் சொன்னா, என் பொண்டாட்டி நில்லுன்னா நிப்பா, உட்காருன்னா உட்காருவா. இல்லேன்னா தூக்கிப்போட்டு நாலு சவட்டி சவட்டிப் புடுவேன் ஆமா..." என்றபடி பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த ராமு, விருட்டென அப்பாவிடம் வந்தான். 'அப்பா, அம்மா கூப்பிடுறாங்க" என்றான் சத்தமாக.

'
ஏண்டா...?" என்றார் அப்பா அதட்டலாக.

"
அம்மா, கொல்லைப்புறத்துல சேலை, துணிமணியெல்லாம் ஊற வைச்சிருக்காங்களாம். அதை துவைச்சிப் போட சொன்னாங்க... " என்று சொல்லிவிட்டு 'சட்'டென வெளியேற, அப்பா முகத்தில் ஈயாடவில்லை.

அப்பா, குழந்தைகளுக்கு இடையேயான உறவுமுறை பற்றி இதுபோன்ற நிறைய குட்டிக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவை எல்லாமே, அப்பா மீது மகனுக்கு சிறுவயதிலேயே தோன்றும் ஒரு வித மன வேறுபாட்டை உணர்த்துவதாகவே உள்ளன.

இவற்றை ஆரம்பத்திலேயே களைய தவறுவதன் விளைவு தான், இன்றைய காலக்கட்டத்தில் பெருகி வரும் முதியோர் இல்லங்கள்.

பெரும்பாலான அப்பாக்கள், நிஜத்தில் 'தவமாய் தவமிருந்து' படத்தில் சித்தரிக்கப்படும் ராஜ்கிரணை போலத்தான் மகன்களுக்காக தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மகன்கள் இதை சினிமாவில் பார்த்துதான் தெரிந்துக் கொள்கிறோம்.

உண்மையை சொல்லைப்போனால், 'அம்மா' அமைதியே உருவான தெய்வம் என்றால், 'அப்பா' கொஞ்சம் கோபமும், கண்டிப்பும் கலந்த தெய்வம். தெய்வங்கள் எப்போதுமே தங்களது குழந்தைகளுக்கு நல்லதே செய்யும்; நல்லதே நினைக்கும்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து, தந்தையர் தினத்தில் மட்டுமல்லாமல் தினந்தோறும் தந்தையை போற்றுவோம், தந்தையை வணங்குவோம்.

வரும் காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாத ஓர் அன்பான சமுதாயத்தை படைப்போம்!

அன்பே வெல்லும்

ஒரு ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தார் ... அவர் விலையுயர்ந்த குதிரை ஒன்றை விலைக்கு வாங்கினார் ... அந்த குதிரை மீது சவாரி செய்ய விரும்பினார் ... அவர் அந்தக் குதிரை மேலே ஏறும் போதெல்லாம் அது அவரை கீழே தள்ளி விழுத்திவிடும் ...அவருக்கு கோவம் வந்து விடூம் சவுக்கால் அடித்து விட்டுப் போய் விடுவார் ... பல நாட்கள் முயன்றும் அவரால் முடியவில்லை ...தோல்வியே கண்டார் ... விலை உயர்ந்த குதிரையை வாங்கியும் சவாரி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தினார் ...

அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார் ... அந்த ஞானியிடம் இந்த பணக்காரர் சென்று தான் ஒரு விலை உயர்ந்த குதிரை வாங்கியதாகவும் .. அந்த குதிரையால் தான் படும் துன்பத்தையும் கூறினார் .... அதர்க்கு ஞானி கேட்டார் ... நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறீர் ? ... அதற்க்கு ( தீனி ) சாப்பாடு போட்டு பேனுகின்றீரா ? அதனைக் குளிப்ப்பாட்டிகிறீரா ? என்று கேட்டார் ..

அவற்றை எல்லாம் ஏன் நான் செய்ய வேண்டும் ... அவற்றை செய்வதர்க்கு பல வேலையாட்களை வைத்திருக்கின்றேன் ... நான் சவாரி செய்ய மட்டும் தான் அதனை வெளியே அழைத்து வருவேன் .. என்று கூறினார் அந்த பணக்காரர் ...

நாளை முதல் நீங்கள் குதிரையுடன் அதிக நேரத்தை செலவிட்டு ... உங்கள் கையாலே உணவு கொடுத்து ... குளிக்க வார்த்து.. அன்பாக அதன் மேலே ( உடம்பு ) தடவி அன்பு காட்டுங்கள் ... அன்பினால் எல்லாம் நடக்கும் என்றார் ஞானி ...

மறுநாள் ஞானி சொன்ன படியே செய்து குதிரையை பரிவோடு ( அன்பாக )கவனிக்க தொடங்கினார் பணக்காரர் .... அதன் பிறகு குதிரை அந்த பணக்காரர் சவாரி செய்யும் போது எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை ... மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை சுமந்து சென்றது .

இதில் இருந்து என்னத்தை புரிந்து கொண்டீர்கள் ? அன்பால் எதையும் வெல்லலாம் ( சாதிக்கலாம் )

டிராக்டர் சாணி போடுமா?

“பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை’ என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?’ என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

Thursday, June 11, 2009

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை…

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..

“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?

“எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.. நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை.. பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன்..!”

உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..

” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று “இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்” என்றார்.

உடன் வாலி, ” என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?” என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் ஒருமுறை நிருபர்கள் கேட்டனர்..

அய்யா.. தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கம்பன், இளங்கோ, வள்ளுவர் என சிறிய பெயராக வைத்திருந்தார்கள்.. நீங்கள் இவ்வளவு பெரிய பெயராக வைத்துள்ளீர்களே..?

அவர்கள் எல்லாம் பெரிய கவிஞர்கள்.. சிறிய பெயராக வைத்திருந்தனர்.. நான் சின்னக் கவிஞன்.. பெயராவது பெரிதாய் இருக்கட்டுமே..!

உள்ளதைச் சொல்லிய சிறுவன்

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் எதிர்வீட்டு வெளிக்கதவுமூடியிருந்தது. வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தெரு வழியே போன ஒரு சிறுவன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.
வாசலில் நின்று கொண்டிருந்த கலைவாணர் அவனைப் பார்த்து விட்டார். தம்பிஇங்கே வாடா என்று அழைத்தார். சிறுவன் மிகவும் அமைதியாக அவர் முன்நின்றான். தம்பி பையிலே என்ன இருக்கு? என்று கலைவாணர் கேட்டார். ஒண்ணுமில்லையே என்று அந்தச் சிறுவன் கூறினான்.
காட்டு பார்க்கலாம் என்று அவன் சட்டைப் பையில் கைவிட்டார். உள்ளே பூட்டுஇருந்தது. கையும் களவுமாகப் பிடிபட்ட அவன் பூட்டை கலைவாணர் கையில்கொடுத்து விட்டு மன்னிப்புக் கேட்டான். ஏண்டா பூட்டை எடுத்தே என்றார்கலைவாணர். பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்னு எடுத்தேன் என்று உள்ளதைச் சொன்னான் அந்தச் சிறுவன்.
அந்த நேரம் அங்கே வந்த எதிர் வீட்டுக்காரர் கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். தெருவில் கலைவாணர் ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அந்தச் சிறுவன் தான் பூட்டைத் திருடிஇருப்பான். என்.எஸ்.கே. பிடித்துக் கொண்டார் என்று கருதி ஆத்திரத்தோடுஅங்கே வந்தார்.
கலைவாணர் சிரித்தபடியே, வாங்க வாங்க... பூட்டைத் தேடுறீங்களா? என்றுகேட்டுவிட்டு ஒரு சிறுவன் தூக்கிக்கிட்டு ஓடினான். அவனை பிடித்துப் பூட்டை. நான் வாங்கி வச்சிருக்கேன். இந்தாங்க பூட்டு. பாவம் சிறுவன் பசிக்காக அப்படிச்செய்துவிட்டான். அதுக்காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள். டேய் தம்பி. கொடுப்பாரு போயி வாங்கிட்டுப் போ! என்று கலைவாணர் சொல்லி அனுப்பினார். சிறுவன் செய்தது திருட்டுதான். ஆனாலும், அச்சிறுவன் உள்ளதைச் சொல்லிவிட்டான் அல்லவா. அவனது உண்மை நிலையை அறிந்த கலைவாணர் அவனதுஇயலாமையை நினைத்து பணம் வாங்கிக் கொடுத்தார்.
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டு - கலைவாணர் ஒருசிறுவனிடமிருந்த இயலாமையால் ஏற்பட்ட திருட்டு குணத்தைக் களைந்தார்.

பாரதியார்

ஒரு சமயம் பாரதியாரும் அவரது துணைவியார் செல்லம்மாளும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று பாரதியாருக்குக் குஷி வந்து விட, நல்ல ராகதாளத்தோடு பாட ஆரம்பித்து விட்டார்.
அந்த பாட்டைக் கேட்டு கடற்கரையில் அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் அவர் பக்கம் திரும்பினர். பிறகு அவரைச் சுற்றி கூடி அமர்ந்து அவரது பாட்டை ரசிக்கத் தொடங்கினர்.
திடீரென்று—
மிக அருகில் வேறொருவர் பாடும் சத்தம் கேட்டது. அந்தப் பாட்டுச் சத்தம் காதில் விழுந்ததும், பாரதியாரைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் திரும்பிப் பார்த்தனர். கட்டுமரம் ஒன்றை சரி செய்தபடி ஒரு மீனவர் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் எழுந்து அவரிடம் ஓடினர்.
வினாடி நேரத்தில் அத்தனை பேரும் மீனவரின் பாட்டைக் கேட்க ஓடிவிட, பாரதியாரும் செல்லம்மாளும் மட்டும் தனித்து விடப்பட்டனர்.
உடனே பாரதியார் தான் பாடுவதை நிறுத்தினார். கோட்டு பாக்கெட்டிலிருந்து பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக் கொண்டு அவரும் மீனவரின் அருகே ஓடினார். செல்லம்மாள் அவரைப் பின் தொடர்ந்தார்.
மீனவரின் அருகே சென்ற பாரதியார் அவர் பாடல் வரிகளை காகிதத்தில் வேகமாக எழுதத் தொடங்கினார்.
மீனவர் பாடி முடித்ததும் பாரதியார் அவர் கைகளைப் பிடித்து, ""ஐயா! நீங்கள் தான் என் குரு!'' என்றார்.
அதைக் கேட்டு மீனவர் உள்பட கூடியிருந்த மக்கள் அனைவரும் திகைத்தனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் பாரதியாரைப் பார்த்து, ""ஐயா! பாரதி அவர்களே! தங்களின் கவித்திறன் என்ன... புலமை ஞானம் என்ன, இசைக் கோவை என்ன... தாங்கள் போய் அந்த மீனவரைக் குரு என்கிறீர்களே!'' என்று கேட்டார்.
அதற்குப் பாரதியார் மெல்லப் புன்னகைத்து, ""உலகில் எந்தப் பாட்டு அல்லது இசை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவர்ந்து இழுக்கிறதோ அதுதான் மிக உயர்ந்த பாட்டு. அந்த உயர்ந்த நிலை கல்விமான்களிடத்தில் இருந்துதான் வர வேண்டுமென்பதில்லை. கல்வி கல்லாதோரிடமிருந்தும் வரும். அந்த நிலை யாரிடமிருந்து வந்தாலும் அவரை என் குருவாக நான் ஏற்றுக் கொள்வேன். இந்த மீனவரின் பாடல், ராகம், தாளம் என்ற கட்டுக்கோப்பை மீறியிருந்தாலும், அது என் உள்ளத்தைத் தொட்டு விட்டதால் அந்தப் பாட்டுக்கு நான் அடிமை!'' என்றார்.

அவரது பதிலைக் கேட்டு, மீனவர் உள்பட கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டனர்.

இருப்பதில் திருப்தி அடை!

குருவிடம் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’

‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’

‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் தேடி கொண்டே இருக்கிறான்.’’

‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

நான் காணும் மனிதர்கள்

புயலடிக்கும் பொழுதோடு
புலர்கிறது விடிகாலை.
அலையடிக்கும் மனதோடு
தொடர்கிறது அன்றாட வாழ்வு.

எந்த நொடியும்
உடைந்து போகும்
நீர்க்குமிழிகளாய்
நான் காணும் மனிதர்கள்.

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பூதம் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

பெரியார் - திரு.வி.க

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க॥ இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.

பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே ஆர தழுவிக்கொண்டாராம்.

பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார்.

உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

Wednesday, June 10, 2009

பெரியார் - மூதறிஞர் ராஜாஜி

பெரியார் ஒரு நட்புக்கடல்। அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி.

தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார்.

அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.

பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை.

ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார்.

அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார்.

எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார்.

இது முதல் தடவை அல்ல....

விவேகானந்தர் ஒரு சமயம் தமிழகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் பிரபலம் அடையாத காலம். அவர் பயணித்த இரயில் பெட்டியில் ஆங்கிலேயச் சிப்பாய்கள் சிலர் இருந்தனர். இவரின் ஆடையைக் கண்டு, சந்நியாசிகளைப் பற்றித் தரக் குறைவாகப் பேசிக்கொண்டே வந்தனர். விவேகானந்தர் பதிலுக்கு ஒன்றுமே பேசாமல் வந்தார். ரயில் சேலம் வந்தபோது, அந்த ரயில் நிலைய அதிகாரியுடன் விவேகானந்தர் உரையாடுவது கண்டு சிப்பாய்கள்,"உமக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கிறதே! எங்கள் பேச்சை மறுத்து ஏன் எதுவும் சொல்லவில்லை?" என்று கேட்டனர்.
"முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவை அல்ல" என்றார் விவேகானந்தர்"

அவர் ஒரு சமுத்திரம்

ஒரு நாள் பல பக்தர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அதில் ஒருவராக அமர்ந்திருந்த செல்வந்தர், தன் பத்து விரல் மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கப் பல் ஆகியனவற்றை அடிக்கடி காட்டி தன் செல்வக் கொழிப்பைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் யாரென வாரியார் கேட்டதற்கு ஊர் மக்கள், அவர்தான் இந்த ஊரிலேயே மிகுந்த செல்வந்தர் என்றனர்.
அன்றிரவு வாரியாரிடம் வந்த செல்வந்தர்,"சுவாமி, நாளைக்கு என்னைப் புகழ்ந்து எல்லோரிடமும் சொல்லுங்கள்" என்று சொல்லிச் சென்றார். அடுத்த நாள் வழக்கம்போல் சபை கூடியதும், வாரியார்,"இவர் யார் தெரியுமா? இவர் ஒரு பெரிய சமுத்திரம். அள்ள அள்ளக் குறையாத கடல். இவ்வூரிலேயே மிகப் பெரிய செல்வந்தர். சமுத்திரம்ன்னா.. சமுத்திரம்தான். ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை" என்றார். செல்வந்தருக்கு உச்சி குளிர்ந்து விட்டது. பாராட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாரியாரிடம் விடைபெற்றுச் சென்று விட்டார்.
பக்தர்களில் ஒருவர் தயக்கத்துடன் எழுந்து, "சாமி! நீங்க இப்படிப் பொய்யாகப் பாராட்டலாமா? அந்த ஆள் ஒரு வடிகட்டிய கஞ்சன். ஒரு நல்ல காரியத்துக்கும் உதவியது இல்லையே?" என்று கேட்டார்.
அதற்கு வாரியார், "அதைத்தானே நானும் சொன்னேன். புரியவில்லையா? சமுத்திரம் ரொம்பப் பெரிசு. ஏகப்பட்ட தண்ணீ இருக்கு. ஒரு வாய் தண்ணி ஒருத்தருக்காவது பயன்படுமா? யார் தாகத்தையாவது தீர்க்குமா? இந்த ஆளிடமும் சமுத்திரம் மாதிரி செல்வம் கொட்டிக் கிடக்கு. ஒருத்தருக்கும் பயன்பட்டதில்லை. புரிந்ததா?" என்றார்.
சமுத்திரம்போல் இருக்காதே! ஒரு குளத்தைப்போல் இரு!

Tuesday, June 9, 2009

கோபம் !!

வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.

'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'. அதுப் போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்யவது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.

உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்துக் கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.

Monday, June 8, 2009

அர்த்தம்

"சாப்பிடுடா சாப்பிடமாட்டேன்''
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'

- உதறிவிட்டு ஓடினேன்

சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது

மாய விளக்கு

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.

அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.

உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,'மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை' என்றாள்.

இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,' கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.''

மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,'ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா' என பாட்டி கேட்டாள்.

திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

''மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்'' என்றபடி பாட்டி 'ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,'வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே 'என்று சிரித்தாள்.

பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.

நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்

இரு தவளைகள்

இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழக்குழியில் விழுந்தன.

இரண்டும் வெளியே வர கடுமையாக முயன்றுகொண்டிருந்தன. இதற்கிடையே பல தவளைகள் குழியின் மேல் கூடின. இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது? முயற்சியை கைவிடுங்கள் நிம்மதியாக செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து இறந்தது.

இரண்டாம் தவளை மேலும் மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது.

அது மேலே வந்ததும் மேலிருந்த தவளைகளெல்லாம் ‘நாங்கள் சொன்னது உன் காதில் விழலியா?’ எனக் கேட்டன.

அந்தத் தவளையோ,’எனக்கு காது கேட்காது. மேலிருந்து வெளியே வர என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி’ என்றது.

Friday, June 5, 2009

அறிஞர்களின் அமுதமொழிகள்

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் - தோரோ.

* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் - நிக்கோபானி.

* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது - சிம்மன்ஸ்.

* மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது - வில்லியம்டே.

* இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் - மெஹர்பாபா.

* இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - கான்பூசியஸ்.

* பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் - தாமஸ் கார்னல்.

* ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் - மாத்ïஸ்.

கண்ணதாசனின் குட்டிக்கதை!

கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது.

சோடா உடைக்கப்பட்டது.

விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது-

‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’
சோடா பதில் சொன்னது-

‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’

சின்னக் கூடை!

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

‘‘ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…’’ என்றான்.

அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

உயர்வு தாழ்வு

புத்தர் சீடர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த அனுபவம் இது. ஆனந்தன் என்பது அவர் பெயர். ஒருநாள் பொட்டல்காடு வழியே ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நாக்கு வறண்டதால் பருக தண்ணீர் கிடைக்குமா? என்று தேடினார். அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்றார்.

அப்போது சிறிது தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக் கண்டார்.

“அம்மா! தாகத்தால் நான் வருந்துகிறேன். கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண் திடுக்கிட்டாள்.

“சுவாமி! நான் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவள். நான் எப்படி தண்ணீர் தர முடியும்?” என்றாள்.

அதற்கு நான் தண்ணீர் தானே கேட்டேன். உங்கள் சாதியைப் பற்றி கேட்கவில்லையே? என்றார் ஆனந்தன்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண் வியப்படைந்தாள். முற்றும் அறிந்த மகான்கள் சாதியை பொருட்டாக மதிப்பதில்லை. மனிதர்களாக பிறந்த அனைவரும் ஒன்றே என்பதை அறிந்து கொண்டாள். உடனே தான் கொண்டு வந்த குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அவருக்கு பருக கொடுத்தார். ஆனந்தனும் அந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் பயணத்தை தொடங்கினார்.

நீதி: மக்கள் அனைவரும் சமம். மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை, என்கிற நீதியை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

தூங்கறதுக்கு நேரம் ஏது?

திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று..

திருமணம் ஒன்றில் தலைமை தாங்க வாரியார் சென்றிருந்தார்.
அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.

சாமி.. முருகனுக்கு ஆறு தலைன்றனுகோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்து
க்கொண்டு பிசியாக இருந்த மணமக்களின் தந்தைகளை அழைத்தார்.

அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?” அவர்கள் இருவரும் "இன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறதுஎன்றார்கள்.

நடிகவேள் அவர்களை பார்த்து வரியார் சொன்னார்...
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்சே இவங்களுக்கு தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு தூக்கம் எப்படி வ்ரும் ? தூங்கறதுக்கு நேரம் ஏது?

சிவாஜி - வாரியார்

திருமுருக கிருபானந்தவாரியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை ஒரு பிரபல சொற்பொழிவாளர் கூற கேட்டேன்.

சொற்பொழிவுக்கு இடையே கேள்விகளை கேட்டு சரியான பதில் சொல்லுபவர்களுக்கு பழம், பூமாலை என பரிசுகள் வழங்குவது வாரியார் ஸ்வாமிகளின் பழக்கம்.

ஒரு சிறுவனை அழைத்து “எம்பெருமான் முருகனுனின் தந்தை பெயர் என்ன?" என கேட்டார்.


திருவிளையாடல் திரைப்படம் வெளிவந்து அனைவராலும் கவரப்பட்ட காலம் அது.

அந்த சிறுவன் யோசிக்காமல் கூறினான் “சிவாஜி”.

கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். வாரியார் கூட்டத்தினரை பார்த்து கூறினார்..“ நேருவை நேருஜீ என்றும் காந்தியை காந்தி ஜீ என்று மரியாதையாக சொல்லுவது போல , எம்பெருமான் முருகனின் தந்தையை சிவாஜி என்கிறான் இந்த பையன். இதில் என்ன தவறு?” என்றார்.

ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நுண்ணறிவு வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

அக்கா...

சின்ன சின்ன சண்டைகள்,
அடிதடி, அழுகை, சமாதானம்
சிறுவயதில் என் அக்காவுடன்...
பள்ளி செல்லும் பருவத்தில்
எனக்காக வீட்டுப் பாடம் செய்பவளாய்...
சற்றே வளர்ந்த பிறகு,
கற்றுக் கொடுக்கும் ஆசானாய்...
பள்ளி இறுதித் தேர்வில்
முதலிடம் பெற்றதன் முழுமுதற் காரணமாய்...
கல்லூரிப் படிப்பில்,
என் விருப்பம் அறிந்து
அப்பாவிடம் பேசிய சமாதான தூதுவனாய்...
அறிவுரை சொல்லும் ஆத்மார்த்த தோழியாய்...
இப்படிப் பல..
அவள் மடி மீது தலை வைத்து
அழுத நாட்களை விட,
இப்போது தான் அதிகம் வலிக்கிறது.
'என்னுடனே இருந்து விடேன்...' என்று
கெஞ்சும் குழந்தை மனதை அடக்கியபடி,
அக்காவின் திருமண வேலைகளில்
மும்முரமாய் சுற்றும்போது...

Thursday, June 4, 2009

நல்லதைத் தேடிக் கண்டுபிடிப்போம். அடையாளம் காட்டுவோம்.

திரு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போராட்டம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. முந்தைய நாள் இரவு ஒரு பாலஸ்தீன கிராமமே வெடிகுண்டு தாக்குதலில் இரையாகி இருந்தது. ஆனால் மறு நாள் காலை பத்திரிக்கையைப் பிரித்த அப்துல் கலாம் திகைத்துப் போனார். காரணம் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும் இஸ்ரேலின் விவசாயி ஒருவர் செய்த சாதனையின் விளக்கங்கள் நிறைந்திருந்தன. குறுகிய இடத்தில் அபார விளைச்சல் செய்து சாதனை படைத்த விவசாயி அதை எப்படிச் செய்தார் என்று படங்களுடன் செய்தி முதல் பக்கம் வந்திருக்க மூன்றாவது பக்கத்தில் தான் அந்த கிராமத்தில் வெடிகுண்டு வெடித்து சேதமான செய்தி வெளிவந்திருந்தது.

இந்தியாவுக்குத் திரும்பிய அப்துல் கலாம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் இந்தத் தகவலைத் தெரிவித்து இது போன்ற நல்ல சாதனைக்கு அங்கு பத்திரிக்கைகளில் கிடைத்த முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி ஏன் நாமும் இது போன்ற நல்லவற்றைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார். நம் பத்திரிக்கைகள் எது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஊரறிந்த விஷயம். பத்திரிக்கைகளில் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட செய்திகள், கிளுகிளுப்பான செய்திகள், பரபரப்பான செய்திகள் என பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது போன்ற சாதனை செய்திகள், நம்பிக்கையூட்டும் நல்ல விஷயங்கள் எல்லாம் மக்களை சென்று அடைகிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

பத்திரிக்கைகளை விடுங்கள், தனி மனிதர்களான நாம் என்ன செய்கிறோம்? நாம் அறிந்து பரப்பும் செய்திகள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நாம் எதைக் காண்கிறோம்? காண்பதில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம்? எதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்? இந்தக் கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது.

காணும் நல்லவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் அவை நம்மால் காணப்படுதேயில்லை. கண்டாலும் அதை சீக்கிரத்திலேயே மறக்கவும் செய்கிறோம். நல்லதல்லாதவற்றையே அதிகம் காண்கிறோம். அதைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம். அதைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். இந்த வியாதி நம்மை அறியாமலேயே பலருக்கும் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் ஜன்னலோரம் இருக்கிற பெண்களின் கழுத்திலிருந்து நகைகளை இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுகள் பற்றி பக்கத்தில் இருந்த ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார். காலம் கெட்டு விட்டது, நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஓரிருவர் சொன்னார்கள். அதே சமயம் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சில புத்தகங்களை இடது தோளில் வைத்து, ஒரு கையால் அவை விழாதபடி இறுக்கமாக பிடித்துக் கொண்டு மறு கையால் இரு கால்களையும் நகர்த்திக் கொண்டு ரயிலில் புத்தகம் விற்றுக் கொண்டு வந்தார். சிலர் அவருக்காகவே புத்தகங்கள் வாங்கினோம். அவர் சென்று விட்டார்.

ஆனால் திருடர்கள் பற்றிய பேச்சே அங்கு தொடர்ந்தது. மற்றவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட திருட்டு அனுபவங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. காலிரண்டும் செயல்படாத போதும் பிச்சையெடுக்காமல் தொழில் செய்து பிழைக்கும் அந்த நபர் பற்றி பேச இருப்பதாக நேரில் பார்த்த பின்னும் அவர்கள் எண்ணவில்லை. ஆனால் திருடர்கள் பற்றி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கேள்விப்பட்ட மற்றவர்களின் அனுபவங்களையும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அப்படி பேசியது தவறு என்று சொல்ல வரவில்லை. இது போன்ற அனுபவப் பகிர்வுகள் மற்ற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் நல்லதைப் பார்க்கையில் மட்டும் நாம் ஊமையாகி விடுகிறோமே அது ஏன் என்பது தான் விளங்கவில்லை.

நம்மைச் சுற்றி நல்லது, கெட்டது இரண்டும் நடக்கிறது. அதில் ஒன்றை மட்டுமே காண்பது, பேசுவது என்பது ஒருவித வியாதியே அல்லவா? அதுவும் எத்தனையோ எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நல்லதைச் செய்பவர்கள், நல்லபடியாக இருப்பவர்கள் உண்மையில் பராக்கிரமசாலிகளே. எதிர்நீச்சல் கஷ்டம் தானே?

நல்லது எதுவும் தானாக நடந்து விடுவதில்லை. அதற்கு உயர்ந்த சிந்தனை, மன உறுதி, கட்டுப்பாடு எல்லாம் தேவைப்படுகிறது. பார்த்தீனியம் தானாக வளரும். நட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு ரோஜாச் செடி அப்படி வளராது. அதை வளர்க்க முயற்சி தேவைப்படுகிறது. அதிகமாக உள்ளது என்பதற்காக நம் முழுக் கவனத்தையும் பார்த்தீனியம் மீதே வைத்து, ரோஜாவைக் காண மறுப்போமா?

எனவே வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லதையும் காணவும், கண்டதைப் பாராட்டவும் மறந்து விடாதீர்கள். நீங்கள் காணும் நல்லவர்களைப் பற்றியும், அவர்களது நல்ல செயல்களைப் பற்றியும் கூட நாலு பேருக்குச் சொல்லுங்கள். எதை அதிகம் காண்கிறோமோ, எதை அதிகம் சிந்திக்கிறோமோ, எதை அதிகம் பேசுகிறோமோ அதுவே நம் வாழ்வில் மேலும் அதிகம் பெருகும் என்று ஞானிகள் சொல்கிறார்கள். எனவே எது உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியும் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அதிக கவனம் கொடுக்க ஆரம்பியுங்கள்.

தீயதையே கண்டு தீயதையே பேசி தீயதையே பரப்புவது இருட்டைப் பரப்புவது போன்றது. ஏற்கெனவே பெருகி இருக்கும் இருட்டை அதிகப்படுத்துவது போலத்தான் அது. இப்படிச் செய்து நம்மை சுற்றி நிறையவே இருட்டடிப்பு செய்து விட்டோம். அவநம்பிக்கை, அச்சம் போன்ற வியாதியைப் பரப்பும் ஊடகமாகி விட்டோம். போதும் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

நல்லதைத் தேடிக் கண்டுபிடிப்போம். அடையாளம் காட்டுவோம். பாராட்டி மரியாதை செய்வோம். மற்றவர்கள் அதற்குத் தகுந்தவர்களாக ஊக்குவிப்போம். இதுவே இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்துவது போன்ற உயர்ந்த, தேவையான செயல். இதை நம்மில் பெரும்பாலானோர் செய்ய முடிந்தால், நமக்குப் பின்வரும் தலைமுறை ஒரு ஒளிமயமான, ஆரோக்கியமான உலகில் அடி எடுத்து வைக்கும் என்பது உறுதி.

தாய்பாசம்

லேய்! சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்கு போகவேண்டமாடா என்று புஷ்பவதியாம்மா கத்தியவாறு அவன் முகத்தில் தண்ணியை தெளித்தாள். சாமியோ, அம்மா நேற்று நான் உறங்குவதற்கு மூன்று மணியாச்சுமா என்று புலம்பியபடி எழுந்தான். காலையில் ஒரு நாளாவது ஒழுங்கா உறங்கவிடுறிங்களா என்று புலம்பியவாறு வாயில் சிறிது உமிகரியை அள்ளிபோட்டுகொண்டு பல்லை தேய்த்தப்படி தெப்பகுளத்தை நோக்கி குளிபதற்காக சென்றான்.

அடுப்பன்கரைக்கு சென்ற அம்மா காலை சாப்பாடு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டாள். பக்கத்து ரூமில் தூங்கிய இளையமகன் செல்வன் அம்மா பசிக்குது என்று அழுதவாறு அம்மாவின் கால்களை கட்டிபிடித்துகொண்டான். மாட்டுக்கு புல்லு பறிக்க வயலுக்கு சென்ற மாற்ற குழந்தைகளை நினைத்தவாறு அரிசியை கழுவி பானையில் போட்டுகொண்டிருந்தாள்.

குளிக்க சென்ற சாமியோ வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம் அம்மா பஸ்சுக்கு நேரம்மாச்சு சீக்கிரம் சோறு போடுமா என்று கத்தியவாறு துணி காயபோட்ட இடத்தைநோக்கி சென்றான். அவனுக்கு இருக்கும் ஒரே பாண்டும் துவைத்து போட்டதால் சுருங்கி போய் இருந்தது. அம்மா கொஞ்சம் சுடு சோறு போடுமா என்னோட பாண்டை அயர்ன் பண்ணிடுறேன் என்றான். அம்மாவோ ஒரு தட்டு நிறைய சோறை போட்டு அவனிடம் கொடுக்க அவன் டவலை கைகளில் சுற்றி தட்டின் அடிபாகத்தால் தேய்க்க பாண்டின் சுருக்கமும் நீங்கியது. அம்மா கொண்டுவந்த தேங்காய் துவையலும் உப்பு தண்ணியும் சேர்த்து இருந்த சுடு சோறில் பிசைந்து சாப்பிட்டான். அம்மா நான் போய்கிட்டு வரேன் என்று எட்டு மணி பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

அதற்குள் மாற்ற குழந்தைகளான திலகன், ஜெயா, குமார் ஆகியோரும் வயலுக்கு சென்று புல்லு அறுத்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களும் அம்மா பள்ளிக்கூடத்துக்கு போகணும் சாப்பாடு தாம்மா என்று கசங்கி போன சட்டையும் கிழிந்து போன நிக்கரையும் போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் வந்தார்கள். அதற்குள் அம்மா ஒரு பெரிய பத்திரம் நிறைய சோறுவடித்த காஞ்சியில் சிறிது உப்பும், தேங்காயும், வறுத்த உளுந்தும் போட்டு அவர்கள் முன்னால் வைத்தாள். அவர்களும் அமைதியாக கஞ்சியை குடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.

காலையில் இருந்தே வீட்டுவேலை செய்துகிட்டு இருந்த அம்மாவுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. மெதுவாக சென்று அடுப்பில் இருந்த சோற்றுபானையை உற்றுபார்த்தாள் அரைபானை சோறு தான் இருந்தது. இப்போது சாப்பிட்டால் ராத்திரிக்கு சோறு பத்தாது என்று நினைத்தவாறு என்றைக்கும் போல் பட்டினியை போக்க தண்ணீர் நிரம்பிய பானையை நோக்கி சென்றாள்....

Wednesday, June 3, 2009

உலகம் புரியும்.

அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்

இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.

புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல

வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடுதான்

விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால்தான்
உலகம் புரியும்.

என் மகளின் ஞாபகம்

நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.

இலங்கை சகோதரனுக்கு/சகோதரிக்கு.....

ஆர்மிகாரனின் தோட்டாக்கள்
உன்னை துளைக்கும் பொழுது
என் மேலும் பட்டு தெறித்தது,
உன் ரத்த துளிகள்.
என் ரத்தம் கொதித்தது...
உள்ளம் துடித்தது...
ஏன் என்றால் நான் இந்தியன்.

முல்லைத்தீவில்
பள்ளிக்கூடத்தின் மீது
குண்டுகள் விழுந்து
துண்டுகள் ஆனது..
அங்குள்ள மொட்டுகள்
மட்டுமல்ல..
எனது இதயமும்...

நீங்கள் நிராகரிக்கப்படவில்லை...
நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்களுக்காக கண்ணீர் வடிக்கும்
இந்தியனால்...
நமக்குள்
தொப்புள் கொடி உறவில்லை என்றாலும்
தனுஷ்கோடி உறவு உள்ளது..
நான் உன் சகோதரன்.
நான் உன் இனம்...

பிணங்களின் குவியல்களில் ,
நீ
உன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...
நான்
உன்னை தேடி கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால்...
நீ என் உறவு...

நான்
அமெரிக்காவில் இருந்தாலும்
என் சகோதரன்
இந்தியாவில் இருந்தாலும்...
நீ
இலங்கையில் இருந்தாலும்...
நம்மை இணைக்கும் பாலம் தமிழ்...
இதில்,
இந்தியன் தமிழன் ,
இலங்கை தமிழன்..
மலேசிய தமிழன்
என
கூறுபோட்டு பார்க்க...
நாம்
மீன்களின் கூட்டம் அல்ல
நானும்,
நீயும்,
அவனும்
தமிழர்கள் தான்.....
உனது
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....

Tuesday, June 2, 2009

அமைதியின் அர்த்தம்

அண்மையில் வாசிக்க கிடைத்த ஒரு குட்டிக்கதையும் அமைதியின் அர்த்தமும்.

அரசன் ஒருவன் ஒரு தனது நாட்டிலுள்ள ஓவியர்களுக்கெல்லாம் ஒரு போட்டிஅறிவித்தான், அமைதி என்று தலைப்பிட்டு அதற்க்கு ஏற்றவாறு யார் ஓவியம்வரைகிரார்களோ அவர்களுக்கு பரிசு என்று.

பல ஓவியர்கள் போட்டியில் பங்கு பற்றினர். அரசனும் ஒவ்வொரு ஓவியமாகபார்த்துக்கொண்டு வந்தான் , இறுதியில் அவனுக்கு இரண்டு ஓவியங்களைபிடித்திருந்தது. ஆனால் ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேண்டும் ஆகவேதிரும்பவும் அவ்வோவியங்களை பார்த்தான்.

முதலாவது ஓவியம் - இதிலே ஒரு சலனமற்ற குளம், சுற்றிவர எந்தவிதஆர்ப்பாட்டமுமில்லாத மலைத்தொடர், மரங்கள் , மேலே நீல வானம் அதிலேஇடையிடையே வெண்முகில்கள். பார்த்தவுடனே அனைவரையும் கவரும்விதத்தில் இருந்தது அவ்வோவியம்.

இரண்டாவதோ - இதிலும் மலை; ஆனால் அத்தனை அழகான மலை இல்லை , வானமும் மிகவும் கோவத்துடன் இருந்தது கருமுகில் சூழ்ந்து மலைபெய்துகொண்டிருந்தது, மலையிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி. மொத்தத்தில் இத்தனைபார்க்கும் போதே காதில் இரைச்சல் கேக்கும் போல் இருந்தது . ஆனால்அப்போதுதான் அரசன் அவ்வோவியத்தை கூர்ந்து பார்த்தான். அதிலே அந்தநீர்வீழ்ச்சிக்கு அருகிலே ஒரு சிறிய மரம் இருந்தது அதிலே ஒரு குருவியின் கூடுஇருந்தது, கூட்டிலே ஒரு தாய்க்குருவி எந்தவித சலனமுமில்லாமல்அமைதியாக இருந்தது.

அரசனும் அந்த ஓவியத்திற்கே பரிசினை வழங்கிவிட்டு இவ்வாறு கூறினான்

"அமைதி என்பது சத்தமும் ஆர்ப்பாட்டமும் கஷ்டங்களும் இல்லாத இடத்தில்இல்லை, இவ்வளவும் நிறைந்த அந்த இடத்திலே எந்தவித பயமோ சலனமோஇன்றி இருக்கும் இதயத்தில்தான் இருக்கிறது"

நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா!!!

வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.

பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !

அம்மா.

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

முட்டை மந்திரம்..

சூடான் நாட்டின் ராஜாவிற்கு அழகான மகன் பிறந்தான்.அவன் பெயர்அனந்தா.மகன் பிறந்த கொஞ்ச நாட்களில் ராஜா நோய்வாய்ப்பட்டுஇறந்துபோனார்.இளவரசன் அனந்தாவை வளர்க்கும் முழு பொறுப்பும் ராணிக்குவந்தது. அனந்தா திறமையான வீரனாக வளர்ந்தான்.ராணிக்கு ஒரே ஒரு கவலைதான். அனந்தாவிற்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவேண்டும். ஏனெனில்ராஜாவிற்கு தீய நண்பர்களின் சகவாசம் கிடைத்து, குடி போதைக்கு அடிமையாகிநோய்வாய்ப்பட்டு இறந்தார். அதனால் மேலும் கவலையுற்றார் ராணி. அனந்தாவை அழைத்துமூன்று முட்டை மந்திரத்தைசொன்னார் ராணி. யார்உனக்கு நண்பர்களாக இருக்க விருப்பப்படுகின்றாயோ, அவர்களை அழைத்துமூன்று அவித்த முட்டைகளை விருந்தாக கொடு. அவர்கள் எப்படிஉண்கிறார்களோ அதன்படியே அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம்என்றார்.

முதலில் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்பயிற்சிகளை மேற்கொண்டனர்.அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்றுமுட்டைகளை கொடுத்தான். அவன் ஒரு முட்டையை சாப்பிட்டு, இரண்டுமுட்டைகளை அனந்தாவிற்கு கொடுத்தான். அவன் அம்மாவிடம் இந்தநிகழ்ச்சியை சொன்னதற்குஉன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டுமுட்டைகளை கொடுத்துள்ளான்இவன் நெருங்கிய நட்பு வேண்டாம்என்றார்கள்.
சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளை படிக்கும் போது வியாபாரி மகன்ஒருவனின் நட்பு கிடைத்தது. அவனையும் அழைத்து மூன்று முட்டைகளைகொடுத்தான் அனந்தா. அவன் மூன்று முட்டைகளையும் முழுங்கினான். அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பும் வேண்டாம்என்றார் ராணி.மற்றொரு மந்திரி மகன் முட்டை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் உன்னை மதிக்கவேயில்லை பார் என்று அவன் நட்பையும் வேண்டாம்என்றாள் ராணி.
ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான் அனந்தா. வேட்டையாடிவிட்டுஅரண்மனை திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. அதனால் காட்டிலே இருக்கும்விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகுவெட்டியின் மகன்விநோதன் இவன் வயதை ஒத்தவன். இருவரும் இரவு நீண்ட நேரம்பேசிக்கொண்டு இருந்தனர். மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடசென்றான்.
விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் அனந்தா. அவனுக்கும் மூன்றுமுட்டைகளை தட்டில் வைத்தான். விநோதன் எழுந்து மேஜை மீது இருந்தகத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரைஒன்றரை முட்டை சாப்பிடலாம் என்றான். அனந்தாவிற்கு ஆனந்தம். உடனேவிநோதனின் நட்பை தாயிடம் தெரிவித்தான். தாய் மகிழ்ந்தாள். அவன்விறகுவெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னை சமமாக நினைத்ததன் மூலம்உன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும்எதிர்பார்க்கவில்லை. இது தான் நட்பில் முக்கியம்.

இளவரசன் அனந்தா போர் முறைகள், கல்வி, அரசியல் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றான். பெரியவனானதும் நாட்டின் அரசனாக பொறுப்பேற்றான். விநோதன்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். கடைசி வரை நல்ல நண்பர்களாகவிளங்கினார்கள்.

Monday, June 1, 2009

சொல்வதற்கு என்ன இருக்கிறது? அம்மா

வாழ்க்க

நினைத்ததபோலஅழகாக இல்ல

வானவில்லினநிறங்களைப்போல

கைகளுக்கஅகப்படாமல

சிறகடித்துபபறக்கும

வண்ணத்துபபூச்சிகளைப்போல

வாழ்க்கஒன்றுமஅழகாக இல்ல

அருவருப்பான மணபுழுவைபபோல

சொத சொதவென நாட்களநகர்கின்றத

அடுப்படியிலபடுத்துறங்கிய பூன

சோம்பலமுறித்தெழுவதைப்போல

சமயத்திலவருமஉற்சாகம

நகரத்தினசந்தடியில

அடிபட்டுபபோயவிடுகிறத

முகவரியிட்ட கடிதங்கள

தபாலபெட்டியில

சேர்த்தவிட்டகாத்திருக்கும

நம்பிக்கைகள்கூட இல்ல

உலகபபுகழ்பெற்ற

நயாகரவீழ்ச்சியபார்ப்பதற்கும்;

கடிதங்களஎழுதவுமமட்டுமல்ல

ஒரதலையசைப்புக்குக்கூட

சிறஅவகாசமஇல்லை.

நட்பமுத்திரைகளசேர்க்கவும

முத்தமிடவும்தான

உறவுகளஇழந்த மனத்தவிப்ப

மட்டுமஎஞ்சியிருக்கிறத

சொல்வதற்கஎன்ன இருக்கிறது?

அம்ம

பூக்களைபபார்க்கின்ற போதும

புன்சிரிக்க முடிவதில்லை.

இருந்துமநம்பிக்கமட்டும

இதயத்திலஎட்டி பார்ப்பதால

தொடர்கிறதவாழ்க்க

பார்த்திப வருடத்தினஇறுதியிலுமகூட

Friday, May 29, 2009

தாயும் மகளும்

பத்து மாதங்கள் சுமந்திருந்து,
உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,
பகலிரவாய் கண்விழித்துக் காத்து,
தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,
வித‌வித‌மாய் உண‌வு செய்து ஊட்டி,
எட்டி உதைத்தாலும் க‌ட்டி அணைத்து,
அழ‌கிய‌ துணிம‌‌ணிக‌ள் வாங்கித் த‌ந்து,
உய‌ரிய‌ ந‌கைக‌ள் பூட்டி அழ‌கு பார்த்து,
ப‌ள்ளிக்கு அனுப்பி ப‌டிக்க‌ வைத்து,
துன்ப‌ம் என்ப‌தே அறியாம‌ல்,
வ‌ள‌ர்த்து பெரிய‌வ‌ளாக்கினாள் தாய்.
யாரோ ஒருவ‌னை எங்கோ பார்த்து,
க‌ண்ணால் பேசி ம‌ன‌தை ப‌றிகொடுத்து,
தாயென்ன..அவ‌ன்தான் த‌ன்னுயிரென‌,
த‌ய‌ங்காம‌ல் ஓடிப்போனாள் ம‌க‌ள்.

Thursday, May 28, 2009

பெத்த மனசு..

ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அந்த அம்மா என்னருகே வந்தார். சன்னமான குரலில், "தம்பி ஒரு ரூபா குடுக்கறியா...டீ சாப்புடனும்"

நான் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பதில்லை. கோபமாக அவரைப் பார்த்து பேச நினைத்தவன், அந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.

"அம்மா.....நீங்களா?... எ... எ... என்னம்மா இது? நீ...நீங்க போய்..."

அவர் முகத்தில் திடீரென்று ஒரு கலவரம் தோன்றியது. சட்டென்று முந்தானையை தலைமேல் முக்காடாய் போட்டுக்கொண்டு அவசரமாய் அந்த இடத்தைவிட்டு விலகி வேகமாய் நடந்தார்.

என் அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓடினாரென்றே சொல்லலாம். நான் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. அப்போதுதான் வந்து நின்ற நகரப் பேருந்திலிருந்து கூட்டமாய் இறங்கியவர்களில் சிலர் என்னை
உரசிக்கொண்டு போனதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

பின்னாலிருந்து யாரோ என் பெயரைச்சொல்லி அழைத்து, பின் என் தோளைத் தொட்டுத் திருப்புவதை உணர்ந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தேன்.

"என்னடா முரளி...பட்டப்பகல்ல பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு கனவு காண்றியா...?

சிரித்துக்கொண்டே கேட்ட என் வகுப்புத்தோழன் பரமேஷைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை சிந்திவிட்டு, "டே பரமேஷ்... மதனோட அம்மாவைப் பாத்தண்டா... அவங்க..."

"தெரியுண்டா. அதான் அப்படி அதிர்ச்சியா நின்னுட்டியா. இல்லாம இருக்குமா? பாவம்டா அவங்க"

"என்னடா என்ன ஆச்சு?"

"அது ஒரு பெரிய கதைடா. அதப்பத்தி அப்புறம் பேசலாம். நீ எப்ப வந்த? இப்ப எங்கருக்க? வைஃப், பொண்ணு எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாம் நல்லாருக்காங்கடா. நேத்துதான் வந்தேன். இப்ப ONGCயில இல்லை, GAILக்கு மாறிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னதான் என்னை குணாவுக்கு மாத்தினாங்க"

"குணாவா... என்னடா கமல் படப்பேரெல்லாம் சொல்ற"

"டே இது ஒரு ஊர்டா. மத்திய பிரதேசத்துல இருக்கு. அங்க எங்களுக்கு ஒரு பூஸ்டர் ஸ்டேஷன் இருக்கு. அதுல ஷிஃப்ட் இன்சார்ஜா இருக்கேன்."

"ஓ... பொண்ணு இப்ப சிக்ஸ்த் இல்ல?"

"ஆமாடா"

"சரி வா காப்பி சாப்புட்டுகிட்டே பேசலாம்"

சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளின் இடையே இருந்த அந்த சிறிய உணவு விடுதிக்குச் சென்று, நாற்காலியிலிருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்த பரமேஷ், என்னையும் அமரச் சொன்னான். இரண்டு காஃபி சொல்லிவிட்டு, மேலும் தாங்கமுடியாதவனாக மதனின் அம்மாவைப்பற்றிக் கேட்டேன்.

"எப்படி இருந்த குடும்பம்... நம்ம கிளாஸிலேயே அவன் குடும்பம்தானடா பணக்கார குடும்பம். ஒரு லாயர் பையன்ங்குறதுல அவனுக்கு அப்பவே பெருமை ஜாஸ்தி. எத்தனை தடவை அவனோட அம்மாக் கையால சாப்பிட்டிருப்போம். அவங்களை இந்த நிலையில பாக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா..."

"என்னடா செய்யறது. எல்லார் வாழ்க்கையிலும் விதி விளையாடும். மதன் வாழ்க்கையில அவனோட தான்தோன்றித்தனமும், அவன் அண்ணனோட சதியும் தாண்டா விளையாடிடிச்சி"

"அவன் தான் பத்தாவது ஃபெயில் ஆனதுக்கப்புறமா படிப்பு ஏறலன்னு நின்னுட்டானேடா. அதுக்கப்புறம் டான்சியில் ஏதோ கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். போன வருஷம் லீவுல வந்திருந்தப்பக்கூட அவனைப் பாத்தேனே... அப்பக்கூட குடிச்சிட்டு பொலம்புனான். நீங்கள்லாம் நல்ல நிலையில இருக்கீங்கடா... என் பொழப்பப்பாருடா... யாரும் பொண்ணுகூட குடுக்க மாட்டங்கறாங்கன்னு."

"அதே பாழாப்போன குடிப்பழக்கம்தாண்டா அவனுக்கு வில்லன். நீ வந்து போனதுக்கப்புறமா அவங்கப்பா திடீர்ன்னு அட்டாக்குல போயிட்டாரு. சொத்து பிரிக்கறப்ப அவங்க அண்ணன் இவனை நல்லா ஏமாத்திட்டாருடா. குடிகாரன், பொண்டாட்டி
புள்ளைங்க வேற இல்லன்னு கொஞ்சமா ஏதோ பேருக்கு குடுத்துட்டு எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டாரு. கொஞ்சநாள் அவங்க அக்கா வீட்டுலத்தான் இருந்தான். அவங்க அக்கா அண்ணனுக்கு மேல. குடிபோதையில இருந்தவன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க. அவனையும் வீட்லருந்து
தொரத்திட்டாங்க."

பரமேஷ் சொல்லச் சொல்ல... மூணு வருடம் முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த சொத்து பிரிப்பு என் நினைவில் ஆடியது. அப்பா இறந்த பிறகு, டவுனில் ஒரு பெரிய வீடும், கிராமத்தில் ஒன்றரை ஏக்கராவில் தென்னந்தோப்பும் மட்டுமே எங்க சொத்து.
அண்ணனுக்கு பெருசா வருமானம் இல்ல. அதுவுமில்லாம மூணு குழந்தைங்க. அதுல ரெண்டு பொண்ணு. அதான் நானே அந்த வீட்டை அவருக்கே விட்டுக்கொடுத்திட்டேன். கிராமத்துல இருந்த நிலத்தை மட்டும் நான் வெச்சுக்கிட்டேன். அம்மா இப்ப அண்ணன் கூடத்தான் இருக்காங்க.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்கிட்ட ஒரு நன்றியுணர்ச்சி எப்பவும் இருக்கும். அந்த நிகழ்ச்சியையும், மதனின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது... உறவுகளுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள் எனத் தோன்றியது.

"என்னடா யோசனையில இருக்கே?"

"ஒண்ணுமில்லடா... சொந்தம், பந்தம், உறவு எல்லாம் பணத்துக்கு முன்னால செல்லாக்காசாப் போச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்குடா."

"அப்படியும் சொல்ல முடியாதுடா. உங்க வீட்லக் கூடத்தான் சொத்து பிரிச்சாங்க. நீ எவ்ளோ பெருந்தன்மையா அந்த வீட்டை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தே. இப்பவும் அண்ணனை நான் பாக்கறப்பல்லாம் உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசுவாரு"

என் மனதில் ஓடியதையே அவனும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல நட்பு என்பது இப்படித்தான் ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது.

"சரிடா... அவனைத்தான் ஏமாத்திட்டாங்க, அவங்க அம்மா ஏண்டா பிச்சை எடுக்கணும்?"

"அவங்க பிச்சை எடுக்கறது அவங்களுக்காக இல்லடா... கெட்டுப்போன தன்னோட சின்ன மகனுக்காக. வீடும் இல்லாம வாசலும் இல்லாம, தெருத்தெருவா அவன் அலைஞ்சி, அஞ்சுக்கும் பத்துக்கும் யார்யார்கிட்டவோ அடி வாங்கி அவமானப்பட்டதைப் பாக்க சகிக்காம, பெரிய மகன்கிட்டபோய் அழுதிருக்காங்க. அதுக்கு அவன், அந்தக்
குடிகாரனுக்காக ஒத்த பைசா குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட இப்ப ஒண்ணுமே இல்லையேடா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு கேட்டதுக்கு, முடிஞ்சா வேலை செய்யச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கான்.

அதைக் கேட்டுத் தாங்க முடியாமத்தான் அவங்களே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சாராயத்துக்காக. அது இல்லன்னா அவன் சீக்கிரமே செத்துப்போயிடுவானோனு பயந்துகிட்டு, இப்படி பிச்சை எடுத்து பத்து ரூபா சேர்ந்தா போதும்... ரெண்டு பாக்கெட் சாராயத்தை வாங்கிக்கிட்டு சத்திரத்துக்குப் போயி அவன் கிட்ட குடுத்துட்டு வருவாங்க. சில சமயம் சாராயம் இல்லாம போனா அவன் குடுக்கற அடியையும் வாங்கிட்டு வருவாங்க."

"கடவுளே... என்ன கொடுமைடா இது. அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளி அள்ளி சோறு போட்டவங்களாச்சேடா... மனசு கேக்கலடா...வா போயி மதனைப் பாத்துட்டு வரலாம்."

இரண்டு பேரும் போன போது அவனோடு அவனுடைய அம்மாவும் இருந்தார். குடித்துவிட்டு சுயநினைவில்லாமலிருந்த மதனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். அது பிச்சைக்காரர்களின் தங்குமிடமான ஒரு பழங்காலத்து சத்திரம். கோணிப்பைகள்தான் அவர்களின் படுக்கைவிரிப்பு. பகலிலேயே இருளடைந்திருக்கும். மதனுக்குப் பக்கத்தில் முழுவதுமாக சாப்பிடப்படாத இட்லிகள் இருந்த பொட்டலத்தை தரையில் பார்த்ததும் விளங்கிவிட்டது உணவு உண்ணக்கூட முடியாத நிலையில் அவன் இருக்கிறானென்று.அவர்களை அந்த நிலையில் பார்த்தபோது என்னையறியாமல் கண்கள்
கலங்கிவிட்டன.

எங்களைப் பார்த்ததும் அம்மா அதிர்ந்துவிட்டார்கள். பின் மெள்ள அதிர்ச்சி சோகமாகி விசும்பி அழத்தொடங்கியதும், அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்ததும் கதறி அழுதுவிட்டார்.மேலே எதுவும் பேசி அவரது மன ரணங்களைக் கீறிவிட
விருப்பமில்லாதவனாக பையிலிருந்து கொஞ்சம் பணத்தை அந்தத் தாயின் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விலகினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த பரமேஷ்...

"ஏண்டா பணம் கொடுத்தே... இன்னும் சாராயம் குடிச்சி சாகட்டுன்னா?"

"நானும் நீயும் குடுக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது வாங்கி மகனுக்கு குடுக்கத்தான் போறாங்க அவங்கம்மா. இந்தப்பணத்துனால அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் குறையட்டுமேடா. மனசு வலிக்குதுடா...குடி குடியைக்
கெடுக்குன்னு சொல்வாங்க ஆனா இங்க இவனுடைய குடி அன்னலட்சுமியையே பிச்சைக்காரி ஆக்கிடுச்சேடா..."

என் தோளைப் பிடித்து ஆறுதலாய் கூட நடந்து வந்தவன், சற்றுதூரம் வந்ததும் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு போய்விட்டான்.

மூன்று மாதத்துக்குப் பிறகு உறவினர் ஒருவரின் துக்கக்காரியத்தில் பங்கு கொள்ள மீண்டும் ஊருக்கு வந்திருந்தேன். அந்தமுறையும் மதனின் அம்மாவை மீண்டும் சந்தித்தேன். வேறு இடத்தில். பக்கத்திலிருந்தவர்களிடம் என்னவோ
சொல்லிக்கொண்டிருந்தார். அருகே சென்றேன்.

அவர் பிச்சைக் கேட்கவில்லை... ஆனால் பார்ப்பவர்களிடமெல்லாம், "என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்... என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.." என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். மதன் இறந்ததற்காக மனம் வருந்தவில்லை. அவன் மரணம் ஒரு மனுஷியை பிணமாக்கிவிட்டதே என நினைத்த போது மனம் கனத்தது. முழுவதுமாய் மனம் பிறழ்ந்த அந்த பெரியமனுஷி... இப்போது பிச்சைக்காரியிலிருந்து பைத்தியக்காரியாகிவிட்டிருந்தாள்.