Tuesday, June 16, 2009

பேராசைக்கு அழிவே முடிவு

விவசாயி ஒருவன் சரியான வருமானம் இல்லாமல் ஏழையாக இருந்தான். அவனுக்கு சீக்கிரமாக பணக்காரனாக வேண்டுமென்று ஆசை. எனவே ஒரு முனிவரைச் சந்திக்கச் சென்றான்.

அவரிடம், "சுவாமி! விவசாயத்தில் அதிக வருமானமில்லை. ஒரே நாளில் பணக்காரனாக ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.

அவனது நிலையை உணர்ந்த முனிவர் ஒரு பூதத்தை வரவழைத்து, "இந்த பூதத்திற்கு எந்த நேரமும் வேலை கொடுத்துக் கொண்டே இரு. விரைவில் பணக்காரனாகி விடுவாய். ஆனால், வேலை கொடுப்பதை நிறுத்தினால் இந்த பூதம் உன்னையே விழுங்கிவிடும். கவனமாயிரு." என்றார்.

அவனோ குளிர்ந்து போனான். விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற பேராசையில், "சுவாமி! வேலை செய்வதுதான் கஷ்டம். வேலை வாங்குவது மிகவும் எளிது." என்று சொல்லி பூதத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

முதல் வேலையாக பூதத்திடம், "நான் தங்குவதற்கு ஒரு பெரிய வீடு கட்டு" என்றான். பூதமோ அந்த இடத்தில் ஒரே நிமிடத்தில் பெரிய மாளிகையையே கட்டிவிட்டது.

அடுத்து, "தங்கச்சுரங்கத்திற்குச் சென்று தங்கத்தை அள்ளி வா!" என்றான். அது நூறு மூட்டை தங்கத்தை நொடியில் சுமந்து கொண்டு வந்து போட்டு விட்டது.

விவசாயிக்குத் தங்கத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி. இருந்தாலும் தான் சொல்லும் வேலைகளை உடனடியாகச் செய்து விடுகிறதே. அடுத்து வேலை கொடுக்காமல் விட்டால் தன்னைக் கொன்று விடுமே என்கிற பயமும் வந்துவிட்டது.

பின் அருகிலிருந்த காட்டை அழித்து அரண்மனையை எழுப்பு என்றான். அதுவும் சில நிமிடங்களில் காட்டை அழித்து அரண்மனையை அமைத்து விட்டது.

விவசாயிக்கு அடுத்து பூதத்திற்கு என்ன வேலையைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

வேலை கொடுக்காததால் அந்த பூதம் அவனை விழுங்க வந்தது.

விவசாயி அலறியடித்துக் கொண்டு முனிவரைத் தேடி ஓடினான்.

"சுவாமி இந்த பூதத்தைக் கட்டி வையுங்கள். இல்லாவிட்டால் என்னை விழுங்கிவிடும்." என்று பயத்தில் கதறினான்.

முனிவர் அவனிடம் சிரித்துக் கொண்டே, "அடேய் இதற்காகவா பயப்படுகிறாய். அதோ அந்த நாயின் வாலை நிமிர்த்தச் சொல்லி பூதத்திற்கு உத்தரவிடு." என்றார்.

அவனும் பூதத்திடம் அப்படியே சொன்னான்.

பூதம் நாயின் வாலை நிமிர்த்த முயன்று பார்த்தது. கடைசியில் அது தோற்றுப் போனது. முடிவில் களைத்துப் போன பூதம், "என்னை விட்டு விடுங்கள். நான் தந்த செல்வத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்று சொல்லிவிட்டு ஓடியது.

முனிவர் அவனிடம், "பேராசை கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் இப்படி விபரீதமான முடிவைத்தான் சந்திக்க நேரிடும். அதை அறிவால் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் அழிவு முடிவாகிவிடும்" என்றார்.

No comments:

Post a Comment