Friday, June 19, 2009

வித்தியாசமான அணுகுமுறை

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான்.

தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான்.

அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் இட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான்.

அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர்.

தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்றறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன்.

பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும்.

அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.

"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

"இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை"

சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள்.

ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள்.

சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான்.

ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.

நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.

இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :

* மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

* உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.

* எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

வெற்றியின் ரகசியம் !!!

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும்.

ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.

கனவு காணுங்கள் – அப்துல் கலாம்

கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல,
உங்களை தூங்க விடாமல் செய்வது தான் அது!

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்துகொள்!

வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.
உன்னைக் கொன்றுவிடும்.
கண்ணைத் திறந்து பார்;
காணாமல் போய்விடும்!

வாழ்க்கை

வாழ்க்கை ஆண்டவன்
கொடுத்த வரப்பிரசாதம்
நல்லவனாக வல்லவனாக
வாழ்ந்துகாட்டு

வாழ்க்கை ஒரு
உல்லாசப்படகு
அதில் இனிமையாக
பயணம் செய்

வாழ்க்கை ஒரு
கடமை
அதனை நிறைவாக
செய்து முடி

வாழ்க்கை ஒரு
மைதானம்
அதில் விளையாடி
வெற்றி கொள்

வாழ்க்கை ஒரு
போராட்டம்
எதிர்நீச்சல் போட்டு
உயர்ந்து நில்

வாழ்க்கை
விலைமதிப்பற்றது
வீணாக்கி விடாதே
இறுகப் பற்றிக்கொள்

யாருக்கு தெரியும்

யாரோடு யாருக்கு
எப்போது காதல் வரும்
யாருக்கு தெரியும்?

எந்த மோதல் காதலாகும்
எந்த காதல் மோதலாகும்
யாருக்கு தெரியும்?

யாருக்காக யார் பிறந்தார்
எங்கே இருக்கின்றார்
யாருக்கு தெரியும்?

பெண் மனதில்
உள்ளதென்ன
யாருக்கு தெரியும்?

பிறந்த தினம் தெரிந்தவர்க்கு
இறக்கும் தினம்
யாருக்கு தெரியும்?

கருவில் வளரும் பிள்ளை
கறுப்பா சிகப்பா
யாருக்கு தெரியும்?

வாழ்க்கை பயணம்
நலமா போர்க்களமா
யாருக்கு தெரியும்?

எல்லாம் தெரிந்தவன்
மேலிருந்து சிரிக்கின்றான்
ஏதும் தெரியாதவன்
கீழிருந்து தவிக்கின்றான்

மண்ணின் மகிமை.

வெளிநாட்டு மோகத்துக்கு
ஆசைப்பட்டதனால்
இன்று............
அவதிப்படுகிறாய்....!
அந்நிய மண்ணில்
அகதி என்ற பெயரோடு
ஊன் உறக்கமின்றி
கடும் குளிரிலும்
தினமும் இயந்திரமாய்
வேலை செய்யும் போதாவது
பிறந்ந மண்ணின்
மகிமையை உணர்ந்துகொள்கிறாயா.......?

Wednesday, June 17, 2009

கண்ணீர்த்துளிகள்

அண்ணாந்து பார்க்கும்
அடுக்கு மாடிக் கட்டிடம்
ஆறு அண்ணாக்களின் தங்கை
என்தேவைகளை பூர்த்தி செய்யும்
என் உயிரான அம்மா அப்பா

தேவையே இல்லாமல்
தேவைகள் என்று எனக்கு
தேவையில்லாமல் வாங்கித்தரும்
என் அன்பு அண்ணாக்கள்

கவலையே என்ன என்று
தெரியாத காலங்கள்
என் கண்களில் இருந்து
ஆனந்தக் கண்ணீரைத் தவிர
அழுகைக்கண்ணீர் வந்ததேயில்லை
வெளிநாட்டின் மோகம்
என்னை தாகம் ஆக்கியது

வேகமாக வெளி நாடுவந்தேன்
என் உழைப்பால் உப்புப் போட்டு
உண்பதற்கு வேலை தேடினேன்
வீட்டிற்குள் மலசல கூடம்
இருக்க விரும்பாத நான்
இன்று மலசலகூடம் கழுவி
என் வயிற்றை ஆற்ற
உப்பைப் போட்டு
உண்பதற்கு உட்கார்ந்தேன்.

என்கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
சோற்றுக்குள் சிந்தி
சோறு உப்பானது.

என் சொந்த மண்ணை
மீண்டும் நினைக்கிறேன்
மீண்டும் என் சோற்றுக்குள்
கண்ணீர்த் துளிகள்.