Wednesday, April 29, 2009

"உன் கோணிப்பை கிழியப் போகிறது..."

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; "வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்..."

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!" என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

"நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்".

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை..."

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது அதிர்ஷ்ட தேவதை. "போதாது. இன்னும் வேண்டும்" என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது". பிச்சைக்காரன் சொன்னான்... "இன்னும் கொஞ்சம் வேண்டும்"...". அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.

"உன் கோணிப்பை கிழியப் போகிறது...". பிச்சைக்காரன் மறுத்தான். "இல்லை... நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்..." மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்"

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை

பகல் கனவு...!

என் அறையின் கதவு
தட்டப்படும் சமயங்களில்
ஆவலுடன் திறந்து பார்ப்பேன்
அவள் வருவாளா என்று.....

அன்றும் அப்படித்தான்
''டக்'' ''டக்'' என்ற சத்தம்
ஆவலுடன் திறந்து பார்த்தேன் - கதவை
என்ன ஆச்சர்யம்!
அவளேதான்! நின்று கொண்டிருந்தாள் நாணலுடன்

கதவை அகலமாய் திறந்தேன்
அவள் அறைக்கு உள்ளே வந்தாள்
அமைதியாய் அமர்ந்தாள்
நீண்ட நேரம் பேசினோம்.....

திடீரென்று முத்தம் தந்தேன் - அவள் செவ்விதழில்
அவள் மறுக்கவில்லை
கண் மூடினால் வெட்கத்தில்
கண் விழித்தேன் நான்
கனவாய் இருந்தது!
பகல் கனவு...!

Friday, April 17, 2009

அன்பு

இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.

அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?

என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.

எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.

இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?

உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.

இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?

Thursday, April 16, 2009

பிரிக்க முடியாத பிணைப்புதான் நம்பிக்கை.

ஒரு சிறிய பெண்குழந்தையும் அவளது தந்தையும் ஒரு
ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள்.

பாலத்தின் நிலையை அறிந்து சற்றே பயந்த தந்தை, "ஆத்துல தவறி விழுந்துடாம இருக்குறதுக்கு என் கைய கெட்டியா பிடிச்சுக்கோம்மா.." என்றார்.

அவள் சொன்னாள் - "இல்லப்பா... நீங்க என் கைய பிடிச்சுக்கோங்க" என்றாள்.

கொஞ்சம் குழம்பிய தந்தை "ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?" என்றார்.

"வித்தியாசம் இருக்குப்பா... பெரிய வித்தியாசம்!" என்றாள் அவள்.

" நான் உங்க கைய பிடிச்சுகிட்டு இருந்தா... ஏதாவது நடக்கும் போது ஒரு வேளை நான் உங்க கைய விட்டுறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனா நீங்க என் கைய பிடிச்சுகிட்டு இருந்தா.. என்னதான் நடந்தாலும் என் கைய நீங்க விடமாட்டீங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும்பா..!" என்றாள்.

எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை வெறும் குருட்டுத்தனமானதல்ல; மனங்களின் சந்திப்பில் இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்புதான் நம்பிக்கை.

ஆகவே நீங்கள் அன்பு செலுத்தும் உறவின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள்; அவர்கள் பற்றிக்கொள்ளட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

நாவினாற் சுட்ட வடு.

ஒரு காலத்தில் மிகவும் கோபப்படக்கூடிய பையன் ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும், யார் பேசினாலும் காரணமின்றி கோபப்படுவான்.

அவனுடைய தகப்பனார் அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளையும்சுத்தியலையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் ஒருஆணியை வீட்டின் காம்பவுண்டு சுவரில் அடிக்கும் படி கூறினார்.

அடுத்த நாளில் அவன் 37 ஆணிகளை சுவரில் அடிக்க வேண்டியதாயிற்று. அத்ற்கடுத்த சில வாரங்களில் அவன் தன்னுடைய கோபத்தைஎப்படிக்கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சுவரில்அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது.

காலப்போக்கில் சுவரில் ஆணி அடிப்பதை விட கோபத்தை கட்டுப்படுத்துவதுஎளிதானது என்பதை அவன் கண்டுபிடித்தான். கடைசியாக ஒரு நாள் அவனால்கோபப்படாமலேயே இருக்க முடிந்தது.

அதை அவன் தகப்பனாரிடம் தெரிவித்தான். அவர் அவன் கோபப்படாமல்இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியை சுவரில் இருந்துபிடுங்குமாறு கூறினார்.

கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாக அவன் பிடுங்கஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன. ஒரு நாள் சுவரில் இருந்த எல்லாஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன.

அதை அறிந்த தகப்பனார் அவனை அந்த சுவரினருகே அழைத்துச் சென்றார்.

"நல்ல காரியம் செய்தாய் மகனே. முன்பு இந்த சுவர் எவ்வளவு அழகாக சுத்தமாகஇருந்தது?! இப்போதும் அதே சுவர்தான். ஆனால் பழைய நிலையிலா இருக்கிறது? இல்லை அல்லவா. கோபத்தில் நீ சொல்லும் வார்த்தைகள் கூட இப்படித்தான் - சுவரில் இருக்கும் ஓட்டைகள் போல - வடுவை உண்டாக்கி விடும். ஒருவனைகத்தியால் குத்திவிட்டு பின்பு நாம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கூட, அந்தக் காயத்தால் ஏற்பட்ட வடு அவன் உடலில் எப்போதும்இருந்துகொண்டேதான் இருக்கும். வார்த்தைகள் மனதில் ஏற்படுத்தும் வடுவும், காயத்தில் ஏற்படும் வடுவைப்போன்றதே என்பதை உணர்ந்து கொள்.

அன்பும், நட்பும் நிறைந்திருப்பவர்களை பெறுவதென்பது ரத்தினங்களைப்பெறுவது போன்றது. அவர்கள் உன்னை மகிழ்விப்பார்கள், உற்சாகப்படுத்துவார்கள். எப்போதும் நீ கூறுவதை காது கொடுத்து கேட்பார்கள். சுக, துக்கங்களில் பங்கு கொண்டு ஆறுதலான வார்த்தைகளைஅள்ளித்தருவார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் எப்போதுமே திறந்தமனதுடன் உனக்காகவே காத்திருப்பார்கள். புரிகிறதா?

நான் எப்போதாவது இது போன்ற ஓட்டையை உண்டாக்கி இருந்தால் என்னைமன்னித்து விடு மகனே."

உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்

சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டிவசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர்சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமானகம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன்பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டுபாத்திரங்களிலும் நீரை நிரப்பி அவற்றைத்தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்குவருவாள்.

அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரைநிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில்கொட்டி வீணாகிவிடும்.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டுபாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரைசுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக்காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாகஇருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவதுபானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்குமிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன்முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப்பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்துசேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப்பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாதபாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".

இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் - "சிறுமியே ஒன்றைக்கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும்கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமேஇருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப்பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜாமலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன்திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவைபூப்பூப்பதற்கு யார் காரணம் - அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர்சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"

நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் எனநன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கானவிதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்தஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்டபிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச்செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம்காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது.

உண்மையில் யார் எப்போதும் ஏழை?

பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம்

குறுநில மன்னன் ஒருவன் தன் படைவீரர்களுடன் அண்டை நாட்டின்மீது
போர் துவக்கப் புறப்பட்டுச் சென்றான்.

செல்லும் வழியில் அடர்ந்த காடு. அந்தக்காட்டில் ஒரு துறவி தவத்தில்
இருந்தார் - உடலில் எந்த ஆடையும் இல்லாத நிலையில்.

இந்தக் குளிரில் இப்படி ஆடைகள் எதுவுமின்றி இவர் இருக்கிறாரே என்று
பரிதாபப்பட்ட மன்னன், தன்னிடம் இருந்த விலையுயர்ந்த போர்வை
ஒன்றை எடுத்துத் தவநிலையில் உட்கார்ந்திருந்த துறவியின் மீது
போர்த்தினான்.

போர்வை தன் உடம்பை மூடியவுடன் கண்விழித்த அந்தத் துறவி,
மன்னனைப் பார்த்தார். கூட இருந்த வீரர்களையும் பார்த்தார்.
பார்த்தவுடன் சொன்னார்:

"
அன்பரே, எனக்குப் போர்வை எதுவும் வேண்டாம். ஏதாவது ஒரு ஏழைக்கு
இந்தப் போர்வையைக்கொடு!"

மன்னன் கேட்டான், " சுவாமி, ஆடைகள் எதுவுமின்றி இருக்கிறீர்கள்.
தங்களைவிட ஏழ்மையானவர் இந்தக் காட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?"

முனிவர் பதிலுக்கு மன்னனைக் கேட்டார்:" எங்கே நீ சென்று கொண்டிருக்கிறாய்?"

"
அண்டை நாட்டின் மீது போர் தொடுக்கப்போய்க் கொண்டிருக்கிறேன்,"
என்று மன்னன் பதில் உரைத்தான்.

உடனே துறவி சொன்னார். "மன்னா! உன் படைவீரர்கள் பலரின் உயிரைப்
பணயம் வைத்துப் போர் செய்யப்போகின்றாய். இருப்பது போதுமென்று
இல்லாது, ஏதோ ஆதாயத்திற்காகப் பலபேரின் உயிரைப் பணயம்
வைக்கிறாய். உண்மையில் நீதான் ஏழை! போதுமென்ற மனமில்லாத
நீதான் ஏழை! ஆகவே உன் போர்வையை நீயே வைத்துக்கொள்!"

மன்னனின் அறிவுக் கண்கள் திறந்தன! தவறை உணர்ந்த மன்னன்
துறவியை வனங்கிவிட்டு, தான் வந்தவழியே திரும்பினான்.

ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
ஒரு துறவியின் போதனையால்.

போதுமென்ற மனமில்லாதவன்தான் எப்போதும் ஏழை!

வாழ்க வளமுடன்!

Wednesday, April 15, 2009

மீண்டும் என் வானம் தொட....

எனக்கென்று ஒரு வானம்,
துரோகங்களின் நிழல்கள் படியாமல்...
அங்கு, என்
விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...
வானம் தொட்டுப்பறந்த
பறவையின் சிறகுகளில்
கொஞ்சம் சிக்கி
அதன் எச்சங்களில்
கொஞ்சம் பூமி பார்த்தேன்....
கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...
அவ்வப்பொழுது
மின்னல் கீற்றுகளை அருவிகளாக்கி,
மலைகளை மாலைகளாக்க
வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....

நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு அம்மாவை...

நகம் வெட்டிக்கொள்ளா
ஞாயிற்று கிழமைகளும்..
கலைந்த கூந்தலின்
சீகைக்காய், தேங்காய் எண்ணெய்
நறுமணங்களும்....
உன்னால் முணுமுணுக்கக் கற்றுக்கொண்ட
பழைய பாடல் வரிகளும்...
உள்ளங்கையின் இளஞ்சிவப்பு
மருதாணி நிறமும்...
மார்கழி மாதத்து உதட்டு வெடிப்பின்
நெய் பூசிய பளபளப்பும்...
வெளிச்சம் தொலைத்த இரவு
மெழுகு உருகல்களின்
கைச்சுடும் தீயும்....
புடவை முந்தானையின்
நனைந்துவிட்ட பாகமும்...
என,
நினைவுப்படுத்த ஆயிரம் உண்டு
அம்மாவை...
புதுத் தாலியின் மஞ்சள் வாசனை உட்பட...

Monday, April 13, 2009

“ஒருமுறை விடை கொடு அம்மா”

வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.

முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீதி இளைஞர்கள் குதிராம் போஸும், பிரபுல்லசகியும் குண்டி வீசினர். கிங்ஸ்போர்டு தப்பி விட்டான். போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்லசகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.

சிறையில் 16 வயதே நிரம்பிய குதிராம் போஸ் எழுதி வைத்திருந்த பாடல்:

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”

குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை. இவர்களின் காலடித்தடங்கள் வழியாகத்தான் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவுக்கு வந்தது.

Monday, April 6, 2009

போதகரும் காரோட்டியும்

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"

Friday, April 3, 2009

படித்ததில் பிடித்தது....

அண்மையில் படித்த தபூ சங்கரின் நெஞ்ச வர்ணக் கிளி
கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்த சில காதல் கவிதைகள்


உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்

*************************************

Thursday, April 2, 2009

எண் ஏழின் சிறப்பு

ழு நாட்களில் இந்த உலகை இறைவன் படைத்ததாக விவிலியம் கூறுவது தொடங்கி உலகின் ஏழு அதிசயங்கள் வரை எண் ஏழின் முக்கியத்துவம் பலவிதம்.
தி மனிதர்கள் என விவிலியம் கூறும் Adam+Eve இவர்கள் பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டினாலும் ஏழு தான் வருகிறது!!

லகின் புதிய ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட தேதியும் 7.7.7 (2007) தான்.

ழு இடம் பெற்றிருக்கும் மேலும் சில விடயங்கள் இங்கே.

திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்கள் கொண்ட வாரத்தை தான் நாம் கடைபிடித்து வருகிறோம்.

பூகோளத்தில் காணப்படும் கண்டங்களும் ஏழே அவை 1.ஆசியா 2.ஆப்பிரிக்கா 3.தென் அமெரிக்கா 4.வட அமெரிக்கா 5.ஐரோப்பா 6.ஆஸ்திரேலியா 7.அண்டார்டிகா

லக அதிசயங்கள் மட்டுமன்றி தற்போது இந்தியாவின் அதிசயங்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதும் ஏழு தான்

.

1.மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2.குஜராத்தின் தோலவிரா பகுதி 3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை 4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ 5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம் 6.டெல்லியின் செங்கோட்டை 7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்
அதோடு தாஜ்மஹாலை அதிசயங்களின் அதிசயம் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 'ஏழு'க்கும் அதிகமான அதிசயங்கள் இருக்க உலக அதிசயங்களை போன்றே நம்மவர்களும் காப்பி அடித்திருப்பது ஏனோ!!

திருப்பதியில் இருக்கும் ஏழுமலை கோயிலும் ஏழினை குறிக்கிறது.

ரிகமபதனி என ஸ்வரங்களும் ஏழே ... "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"சிலுவையில் இறுதியாக இயேசு கிறிஸ்து அருளியதாக விவிலியம் கூறுவதும் ஏழு வார்த்தைளே.

த்தாலியின் ரோம் நகரை சூழ்ந்து இருக்கும் குன்றுகளின் (hills) எண்ணிக்கையும் ஏழாக தான் இருக்கிறது. 1.Aventinus (Aventine) 2.Caelius (Caelian) 3.Capitolium (Capitoline) 4.Esquiliae (Esquiline) 5.Palatium (Palatine) 6.Quirinalis (Quirinal) 7.Viminalis (Viminal)

பிரபலமான ஜெர்மானிய கதை Snow white ல் இடம் பெற்றிருக்கும் குள்ளர்களின் எண்ணிக்கையும் ஏழே.

னக்கு தெரிந்தது இவ்வளவு தான்.ஏழின் சிறப்பை மேலும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

Wednesday, April 1, 2009

நம் வாழ்க்கை நம் கையில்

யதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்?!