Thursday, April 16, 2009

உண்மையில் யார் எப்போதும் ஏழை?

பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம்

குறுநில மன்னன் ஒருவன் தன் படைவீரர்களுடன் அண்டை நாட்டின்மீது
போர் துவக்கப் புறப்பட்டுச் சென்றான்.

செல்லும் வழியில் அடர்ந்த காடு. அந்தக்காட்டில் ஒரு துறவி தவத்தில்
இருந்தார் - உடலில் எந்த ஆடையும் இல்லாத நிலையில்.

இந்தக் குளிரில் இப்படி ஆடைகள் எதுவுமின்றி இவர் இருக்கிறாரே என்று
பரிதாபப்பட்ட மன்னன், தன்னிடம் இருந்த விலையுயர்ந்த போர்வை
ஒன்றை எடுத்துத் தவநிலையில் உட்கார்ந்திருந்த துறவியின் மீது
போர்த்தினான்.

போர்வை தன் உடம்பை மூடியவுடன் கண்விழித்த அந்தத் துறவி,
மன்னனைப் பார்த்தார். கூட இருந்த வீரர்களையும் பார்த்தார்.
பார்த்தவுடன் சொன்னார்:

"
அன்பரே, எனக்குப் போர்வை எதுவும் வேண்டாம். ஏதாவது ஒரு ஏழைக்கு
இந்தப் போர்வையைக்கொடு!"

மன்னன் கேட்டான், " சுவாமி, ஆடைகள் எதுவுமின்றி இருக்கிறீர்கள்.
தங்களைவிட ஏழ்மையானவர் இந்தக் காட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?"

முனிவர் பதிலுக்கு மன்னனைக் கேட்டார்:" எங்கே நீ சென்று கொண்டிருக்கிறாய்?"

"
அண்டை நாட்டின் மீது போர் தொடுக்கப்போய்க் கொண்டிருக்கிறேன்,"
என்று மன்னன் பதில் உரைத்தான்.

உடனே துறவி சொன்னார். "மன்னா! உன் படைவீரர்கள் பலரின் உயிரைப்
பணயம் வைத்துப் போர் செய்யப்போகின்றாய். இருப்பது போதுமென்று
இல்லாது, ஏதோ ஆதாயத்திற்காகப் பலபேரின் உயிரைப் பணயம்
வைக்கிறாய். உண்மையில் நீதான் ஏழை! போதுமென்ற மனமில்லாத
நீதான் ஏழை! ஆகவே உன் போர்வையை நீயே வைத்துக்கொள்!"

மன்னனின் அறிவுக் கண்கள் திறந்தன! தவறை உணர்ந்த மன்னன்
துறவியை வனங்கிவிட்டு, தான் வந்தவழியே திரும்பினான்.

ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
ஒரு துறவியின் போதனையால்.

போதுமென்ற மனமில்லாதவன்தான் எப்போதும் ஏழை!

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment