Friday, May 29, 2009

தாயும் மகளும்

பத்து மாதங்கள் சுமந்திருந்து,
உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,
பகலிரவாய் கண்விழித்துக் காத்து,
தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,
வித‌வித‌மாய் உண‌வு செய்து ஊட்டி,
எட்டி உதைத்தாலும் க‌ட்டி அணைத்து,
அழ‌கிய‌ துணிம‌‌ணிக‌ள் வாங்கித் த‌ந்து,
உய‌ரிய‌ ந‌கைக‌ள் பூட்டி அழ‌கு பார்த்து,
ப‌ள்ளிக்கு அனுப்பி ப‌டிக்க‌ வைத்து,
துன்ப‌ம் என்ப‌தே அறியாம‌ல்,
வ‌ள‌ர்த்து பெரிய‌வ‌ளாக்கினாள் தாய்.
யாரோ ஒருவ‌னை எங்கோ பார்த்து,
க‌ண்ணால் பேசி ம‌ன‌தை ப‌றிகொடுத்து,
தாயென்ன..அவ‌ன்தான் த‌ன்னுயிரென‌,
த‌ய‌ங்காம‌ல் ஓடிப்போனாள் ம‌க‌ள்.

Thursday, May 28, 2009

பெத்த மனசு..

ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அந்த அம்மா என்னருகே வந்தார். சன்னமான குரலில், "தம்பி ஒரு ரூபா குடுக்கறியா...டீ சாப்புடனும்"

நான் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பதில்லை. கோபமாக அவரைப் பார்த்து பேச நினைத்தவன், அந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.

"அம்மா.....நீங்களா?... எ... எ... என்னம்மா இது? நீ...நீங்க போய்..."

அவர் முகத்தில் திடீரென்று ஒரு கலவரம் தோன்றியது. சட்டென்று முந்தானையை தலைமேல் முக்காடாய் போட்டுக்கொண்டு அவசரமாய் அந்த இடத்தைவிட்டு விலகி வேகமாய் நடந்தார்.

என் அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓடினாரென்றே சொல்லலாம். நான் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. அப்போதுதான் வந்து நின்ற நகரப் பேருந்திலிருந்து கூட்டமாய் இறங்கியவர்களில் சிலர் என்னை
உரசிக்கொண்டு போனதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

பின்னாலிருந்து யாரோ என் பெயரைச்சொல்லி அழைத்து, பின் என் தோளைத் தொட்டுத் திருப்புவதை உணர்ந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தேன்.

"என்னடா முரளி...பட்டப்பகல்ல பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு கனவு காண்றியா...?

சிரித்துக்கொண்டே கேட்ட என் வகுப்புத்தோழன் பரமேஷைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை சிந்திவிட்டு, "டே பரமேஷ்... மதனோட அம்மாவைப் பாத்தண்டா... அவங்க..."

"தெரியுண்டா. அதான் அப்படி அதிர்ச்சியா நின்னுட்டியா. இல்லாம இருக்குமா? பாவம்டா அவங்க"

"என்னடா என்ன ஆச்சு?"

"அது ஒரு பெரிய கதைடா. அதப்பத்தி அப்புறம் பேசலாம். நீ எப்ப வந்த? இப்ப எங்கருக்க? வைஃப், பொண்ணு எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாம் நல்லாருக்காங்கடா. நேத்துதான் வந்தேன். இப்ப ONGCயில இல்லை, GAILக்கு மாறிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னதான் என்னை குணாவுக்கு மாத்தினாங்க"

"குணாவா... என்னடா கமல் படப்பேரெல்லாம் சொல்ற"

"டே இது ஒரு ஊர்டா. மத்திய பிரதேசத்துல இருக்கு. அங்க எங்களுக்கு ஒரு பூஸ்டர் ஸ்டேஷன் இருக்கு. அதுல ஷிஃப்ட் இன்சார்ஜா இருக்கேன்."

"ஓ... பொண்ணு இப்ப சிக்ஸ்த் இல்ல?"

"ஆமாடா"

"சரி வா காப்பி சாப்புட்டுகிட்டே பேசலாம்"

சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளின் இடையே இருந்த அந்த சிறிய உணவு விடுதிக்குச் சென்று, நாற்காலியிலிருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்த பரமேஷ், என்னையும் அமரச் சொன்னான். இரண்டு காஃபி சொல்லிவிட்டு, மேலும் தாங்கமுடியாதவனாக மதனின் அம்மாவைப்பற்றிக் கேட்டேன்.

"எப்படி இருந்த குடும்பம்... நம்ம கிளாஸிலேயே அவன் குடும்பம்தானடா பணக்கார குடும்பம். ஒரு லாயர் பையன்ங்குறதுல அவனுக்கு அப்பவே பெருமை ஜாஸ்தி. எத்தனை தடவை அவனோட அம்மாக் கையால சாப்பிட்டிருப்போம். அவங்களை இந்த நிலையில பாக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா..."

"என்னடா செய்யறது. எல்லார் வாழ்க்கையிலும் விதி விளையாடும். மதன் வாழ்க்கையில அவனோட தான்தோன்றித்தனமும், அவன் அண்ணனோட சதியும் தாண்டா விளையாடிடிச்சி"

"அவன் தான் பத்தாவது ஃபெயில் ஆனதுக்கப்புறமா படிப்பு ஏறலன்னு நின்னுட்டானேடா. அதுக்கப்புறம் டான்சியில் ஏதோ கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். போன வருஷம் லீவுல வந்திருந்தப்பக்கூட அவனைப் பாத்தேனே... அப்பக்கூட குடிச்சிட்டு பொலம்புனான். நீங்கள்லாம் நல்ல நிலையில இருக்கீங்கடா... என் பொழப்பப்பாருடா... யாரும் பொண்ணுகூட குடுக்க மாட்டங்கறாங்கன்னு."

"அதே பாழாப்போன குடிப்பழக்கம்தாண்டா அவனுக்கு வில்லன். நீ வந்து போனதுக்கப்புறமா அவங்கப்பா திடீர்ன்னு அட்டாக்குல போயிட்டாரு. சொத்து பிரிக்கறப்ப அவங்க அண்ணன் இவனை நல்லா ஏமாத்திட்டாருடா. குடிகாரன், பொண்டாட்டி
புள்ளைங்க வேற இல்லன்னு கொஞ்சமா ஏதோ பேருக்கு குடுத்துட்டு எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டாரு. கொஞ்சநாள் அவங்க அக்கா வீட்டுலத்தான் இருந்தான். அவங்க அக்கா அண்ணனுக்கு மேல. குடிபோதையில இருந்தவன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க. அவனையும் வீட்லருந்து
தொரத்திட்டாங்க."

பரமேஷ் சொல்லச் சொல்ல... மூணு வருடம் முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த சொத்து பிரிப்பு என் நினைவில் ஆடியது. அப்பா இறந்த பிறகு, டவுனில் ஒரு பெரிய வீடும், கிராமத்தில் ஒன்றரை ஏக்கராவில் தென்னந்தோப்பும் மட்டுமே எங்க சொத்து.
அண்ணனுக்கு பெருசா வருமானம் இல்ல. அதுவுமில்லாம மூணு குழந்தைங்க. அதுல ரெண்டு பொண்ணு. அதான் நானே அந்த வீட்டை அவருக்கே விட்டுக்கொடுத்திட்டேன். கிராமத்துல இருந்த நிலத்தை மட்டும் நான் வெச்சுக்கிட்டேன். அம்மா இப்ப அண்ணன் கூடத்தான் இருக்காங்க.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்கிட்ட ஒரு நன்றியுணர்ச்சி எப்பவும் இருக்கும். அந்த நிகழ்ச்சியையும், மதனின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது... உறவுகளுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள் எனத் தோன்றியது.

"என்னடா யோசனையில இருக்கே?"

"ஒண்ணுமில்லடா... சொந்தம், பந்தம், உறவு எல்லாம் பணத்துக்கு முன்னால செல்லாக்காசாப் போச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்குடா."

"அப்படியும் சொல்ல முடியாதுடா. உங்க வீட்லக் கூடத்தான் சொத்து பிரிச்சாங்க. நீ எவ்ளோ பெருந்தன்மையா அந்த வீட்டை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தே. இப்பவும் அண்ணனை நான் பாக்கறப்பல்லாம் உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசுவாரு"

என் மனதில் ஓடியதையே அவனும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல நட்பு என்பது இப்படித்தான் ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது.

"சரிடா... அவனைத்தான் ஏமாத்திட்டாங்க, அவங்க அம்மா ஏண்டா பிச்சை எடுக்கணும்?"

"அவங்க பிச்சை எடுக்கறது அவங்களுக்காக இல்லடா... கெட்டுப்போன தன்னோட சின்ன மகனுக்காக. வீடும் இல்லாம வாசலும் இல்லாம, தெருத்தெருவா அவன் அலைஞ்சி, அஞ்சுக்கும் பத்துக்கும் யார்யார்கிட்டவோ அடி வாங்கி அவமானப்பட்டதைப் பாக்க சகிக்காம, பெரிய மகன்கிட்டபோய் அழுதிருக்காங்க. அதுக்கு அவன், அந்தக்
குடிகாரனுக்காக ஒத்த பைசா குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட இப்ப ஒண்ணுமே இல்லையேடா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு கேட்டதுக்கு, முடிஞ்சா வேலை செய்யச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கான்.

அதைக் கேட்டுத் தாங்க முடியாமத்தான் அவங்களே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சாராயத்துக்காக. அது இல்லன்னா அவன் சீக்கிரமே செத்துப்போயிடுவானோனு பயந்துகிட்டு, இப்படி பிச்சை எடுத்து பத்து ரூபா சேர்ந்தா போதும்... ரெண்டு பாக்கெட் சாராயத்தை வாங்கிக்கிட்டு சத்திரத்துக்குப் போயி அவன் கிட்ட குடுத்துட்டு வருவாங்க. சில சமயம் சாராயம் இல்லாம போனா அவன் குடுக்கற அடியையும் வாங்கிட்டு வருவாங்க."

"கடவுளே... என்ன கொடுமைடா இது. அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளி அள்ளி சோறு போட்டவங்களாச்சேடா... மனசு கேக்கலடா...வா போயி மதனைப் பாத்துட்டு வரலாம்."

இரண்டு பேரும் போன போது அவனோடு அவனுடைய அம்மாவும் இருந்தார். குடித்துவிட்டு சுயநினைவில்லாமலிருந்த மதனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். அது பிச்சைக்காரர்களின் தங்குமிடமான ஒரு பழங்காலத்து சத்திரம். கோணிப்பைகள்தான் அவர்களின் படுக்கைவிரிப்பு. பகலிலேயே இருளடைந்திருக்கும். மதனுக்குப் பக்கத்தில் முழுவதுமாக சாப்பிடப்படாத இட்லிகள் இருந்த பொட்டலத்தை தரையில் பார்த்ததும் விளங்கிவிட்டது உணவு உண்ணக்கூட முடியாத நிலையில் அவன் இருக்கிறானென்று.அவர்களை அந்த நிலையில் பார்த்தபோது என்னையறியாமல் கண்கள்
கலங்கிவிட்டன.

எங்களைப் பார்த்ததும் அம்மா அதிர்ந்துவிட்டார்கள். பின் மெள்ள அதிர்ச்சி சோகமாகி விசும்பி அழத்தொடங்கியதும், அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்ததும் கதறி அழுதுவிட்டார்.மேலே எதுவும் பேசி அவரது மன ரணங்களைக் கீறிவிட
விருப்பமில்லாதவனாக பையிலிருந்து கொஞ்சம் பணத்தை அந்தத் தாயின் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விலகினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த பரமேஷ்...

"ஏண்டா பணம் கொடுத்தே... இன்னும் சாராயம் குடிச்சி சாகட்டுன்னா?"

"நானும் நீயும் குடுக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது வாங்கி மகனுக்கு குடுக்கத்தான் போறாங்க அவங்கம்மா. இந்தப்பணத்துனால அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் குறையட்டுமேடா. மனசு வலிக்குதுடா...குடி குடியைக்
கெடுக்குன்னு சொல்வாங்க ஆனா இங்க இவனுடைய குடி அன்னலட்சுமியையே பிச்சைக்காரி ஆக்கிடுச்சேடா..."

என் தோளைப் பிடித்து ஆறுதலாய் கூட நடந்து வந்தவன், சற்றுதூரம் வந்ததும் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு போய்விட்டான்.

மூன்று மாதத்துக்குப் பிறகு உறவினர் ஒருவரின் துக்கக்காரியத்தில் பங்கு கொள்ள மீண்டும் ஊருக்கு வந்திருந்தேன். அந்தமுறையும் மதனின் அம்மாவை மீண்டும் சந்தித்தேன். வேறு இடத்தில். பக்கத்திலிருந்தவர்களிடம் என்னவோ
சொல்லிக்கொண்டிருந்தார். அருகே சென்றேன்.

அவர் பிச்சைக் கேட்கவில்லை... ஆனால் பார்ப்பவர்களிடமெல்லாம், "என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்... என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.." என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். மதன் இறந்ததற்காக மனம் வருந்தவில்லை. அவன் மரணம் ஒரு மனுஷியை பிணமாக்கிவிட்டதே என நினைத்த போது மனம் கனத்தது. முழுவதுமாய் மனம் பிறழ்ந்த அந்த பெரியமனுஷி... இப்போது பிச்சைக்காரியிலிருந்து பைத்தியக்காரியாகிவிட்டிருந்தாள்.

காத்திருக்கிறது என் இதயம்.

என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும்,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவாசிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம்.

அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும்...

அப்பா...
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்...

அம்மாவின் ஆன்மிக கருத்துக்களும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவுக்கண்னை திறந்தது எனலாம்
புலம் பெயரும் வரை...
மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை...

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

மலரும் நினைவுகள் !!!

ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு


பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.D கூட விட்டதில்ல!


அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!


பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!


அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!


படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!


வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் -மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...


தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!


-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!


அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!


கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது!

நினைவுகள் அழிவதில்லை

ரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்

ரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

தில் அளிக்கவே-எதிரொலியால்
தில் அளிக்கவே படைக்கப்பட்ட னை உயர மலைகளும்

ருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்

கலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

திலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்

ல்லாத ஒன்றை
ன் தேடுகிறாய் என
.சி அறையின் சுவர்கள்
ளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில


கவிராயனும் கொல்லனும்

பாரதியரின் சிறுகதைகளில் ஒன்று

ஐரோப்பாவில் மகா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு நாள் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப் பட்டது . அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம் போன படிக்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்து விட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறைலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறு மாறாக மாற்றி வைத்துக் குழப்பமுண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன் "நீ யாரடா பயித்தியம் கொண்டவன்? என்னுடைய சாமான்களையெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்" என்றான்.

"உனக்கென்ன?" என்று கேட்டார் கவிராயர்.

"எனக்கென்னவா? என்னுடைய சொத்து தம்பீ, என்னுடைய ஜீவனம்" என்றான் கொல்லன்.

அதற்குக் கவிராயர், "அது போலவே தான் என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே. என்னுடைய பாட்டை நீ தவறாகப் பாடித் தாறுமாறாகக் கலைத்தாய். எனக்கு அது தான் ஜீவனம் . இனிமேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே." என்று சொல்லிவிட்டுப் போனார்.

Wednesday, May 27, 2009

அம்மா என்றழைத்தாலே ஆனந்தமே

*தாயே வரமருள்வாயே
*
*அம்மா என்றழைத்தாலே ஆனந்தமே
ஆண்டவன் எனக்களித்த அவதாரமே
இன்னல்கள் நிறைந்த அந்நாளில்
ஈன்றாலே எனை ஒரு திரு நாளில்

உலகினில் உன்னைப் போல் ஒருவருண்டோ ? என
ஊக்கத்தால் எனை உயர்த்தியவள் அவளன்றோ ?
எந்திரமாய் என்க்காக உழைத்தாளே
ஏணியாகி எனை உயர்த்தி தான் மகிழ்ந்தாளே

ஐயமின்றி வாழ வழி வகுத்தாளே
ஒற்றுமையாய் எந்நாளும் வாழ் என்றாளே
ஓடாக எனை அனு தினமும் காத்தாளே
ஔடதங்கள் கொடுத்து எனைப் பாதுகாத்தாளே

உடல் கொடுத்தாய் உயிர்க் கொடுத்தாய்
மொழிக் கொடுத்தாய் விழிக் கொடுத்தாய்
வாழ வழிக் கொடுத்தாய் --- அம்மா
எதைக் கொடுப்பேன் இன்று நானுனக்கு

பணம் தரவா பழம் தரவா
பொருள் தரவா புதுப் புடவைத்தான் தரவா
எனக்குத் தெரியும் என் அம்மா
என்னிடம் நீ எதிர்பார்ப்பது எதுவென்று

பொன்னல்ல புகழல்ல பொருளல்ல ஓடும் இந்த எந்திர வாழ்வில்
ஒரு பொழுதாவது கனிவோடு உன்னோடு நான் பேசுவேனா ? என்று
உன் கண்ணின் இமையென எனைக் காத்தாயே ஒரு பொழுதென்ன தாயே
ஓராயிரம் பொழுது உன்னிடம் பேச நீ எனக்கு வரமருள்வாயே

Sunday, May 24, 2009

Sand and Stone

A story tells that two friends were walking through the desert. During some point of the journey they had an argument, and one friend slapped the other one in the face. The one who got slapped was hurt, but without saying anything, wrote in the sand: "TODAY MY BEST FRIEND SLAPPED ME IN THE FACE."

They kept on walking until they found an oasis, where they decided to take a bath. The one, who had been slapped, got stuck in the mire and started drowning, but the friend saved him. After the friend recovered from the near drowning, he wrote on a stone: "TODAY MY BEST FRIEND SAVED MY LIFE."

The friend who had slapped and saved his best friend asked him, "After I hurt you, you wrote in the sand and now, you write on a stone, why?"

The other friend replied: "When someone hurts us, we should write it down in sand where winds of forgiveness can erase it away. But, when someone does something good for us, we must engrave it in stone where no wind can ever erase it."

LEARN TO WRITE YOUR HURTS IN THE SAND, AND TO CARVE YOUR BENEFITS IN STONE

Friday, May 22, 2009

நல்வழியில் செல்வோம்

நபிகள் நாயகத்திடம் அவரது தோழர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.ஒருமுறை ஏழை ஒருவர் நாயகத்திடம் வந்தார்.
"அண்ணலே! எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இவர்களை திருமணம் செய்து கொடுக்க என்னிடம் பணமில்லை. நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்," என்றார்.நாயகம் சூஇல்லை' என சொன்னால் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் தான் சொல்வார். அது என்ன தெரியுமா? சூஅல்லாஹ்வுக்கு நிகராக வேறு தெய்வம் இல்லை' என்பார். அதே நேரம், நாயகமே மிகுந்த கஷ்டப்பட்ட நிலையில் இருக்கும்போது, அந்த ஏழைக்கு உதவ அவரால் முடியவில்லை. இருப்பினும், அவரை வெறுங்கை யுடன் அனுப்ப மனமில்லாமல், அவ்வூர் செல்வந்தர் ஒருவரிடம் அனுப்பி வைத்து, "நண்பரே! தாங்கள் அவரிடம் அல்லாஹ்வின் பெயரால் உதவி கேளுங்கள்," என்றார்.
அவரும் செல்வந்தரிடம் சென்று, இறைவனின் பெயரால் உதவி கேட்டார். செல்வந்தர் அவருக்கு பத்து திர்ஹம் கொடுத்தார். இவ்வளவு சிறிய தொகையைக் கண்டு வந்தவர் திகைத்தார். அவர் நாயகத்திடம் ஓடிச்சென்று, நடந்ததைச் சொன்னார்.
இப்போது நாயகம் அவரிடம், "மீண்டும் அவரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரின் (நாயகம்) பெயரால் உதவி செய்யுங்கள் எனகேளுங்கள்," என்றார். அவரும் மீண்டும் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதரின் பெயரால் உதவி செய்யுங்கள்," என்றதும், செல்வந்தர் பரவசமாகி விட்டார். ஓடிச்சென்று, வீட்டில் இருந்த அனைத்து செல்வத்தையும் எடுத்து வந்து, "எடுத்துக் கொள்ளுங்கள். எனது பெரும் தலைவரின் பெயரைச் சொல்லிக் கேட்ட நீங்கள் குறையுடன் போகக்கூடாது," என்றார். அந்த ஏழை மனிதர் குழம்பி விட்டார்.
ஒரு பொருளைக் கூட அவர் எடுக்கவில்லை. நாயகத்திடம் ஓடிச்சென்று, "அண்ணலாரே! இறைவன் பெயரைச் சொல்லி கேட்ட போது பத்து திர்ஹம் தந்தவர், தங்கள் பெயரைச் சொல்லிக் கேட்டதும் எல்லா பொருளையும் தந்து விட்டாரே? எனக்கு ஏதும் புரியவில்லையே?" என்றார். நாயகம் அந்த செல்வந்தரையே அழைத்து வரச்செய்தார். அவரிடம், இதுபற்றி கேட்டார்.
"இறைவனின் திருத்தூதரே! இறைவனைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? இருளில் உழன்று கொண்டிருந்த எங்களுக்கு, சூஇறையென்னும் பேரொளி இதோ' என சுட்டிக்காட்டி, எங்களுக்கு வழிகாட்டி, எங்களை நேர்வழியில் செலுத்த வந்தவர் நீங்களல்லவா? உங்களைத்தானே எங்களுக்கு நன்கு தெரியும். இறை யென்னும் பேரொளியை உங்கள் கண்கள் மூலம் தானே தெரிந்து கொண்டோம்," என நெகிழ்ந்து கண்ணீர் வழிய சொன்னார்.
பார்த்தீர்களா! "இறைவனே எல்லாம்! எல்லாப்புகழும் இறைவனுக்கே! அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கின்றான். அல்லாஹ் யாவையும் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்பவனாக இருக்கின்றான். அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவாளனுமாக இருக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமான மதி நுட்பமுடையவனாக இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் குற்றங்களை மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான்," என்று சொல்லும் குர்ஆன் அவன் மூலமாக நாயகத்துக்கு தரப்பட்டது. நாயகம் இவற்றை உலகத்துக்குப் போதித்தார்.
இறைவனின் பாதையில், பெருந்தகை நாயகம் போதித்த நல்வழியில் செல்ல உறுதியெடுப்போம்.

தகுதியானவர்களே வேலைக்கு தேவை

ஒரு பணியைச் செய்ய வேண்டுமானால், அதற்குரிய தகுதியை முழுமையாகப் பெற்றவர்களாலேயே முடியும். ஆண்டவர் அவரவர் இன்னின்ன பணிகளையே செய்ய முடியும் என ஏற்கனவே நிர்ணயித்தே நம்மை பூமியில் பிறக்கச் செய்கிறார். ஒரு நாட்டில் மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த புத்திசாலி. ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால், ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு விவசாயி. தன் மந்திரி அண்ணன், உழைப்பே இல்லாமல் நிறைய சம்பாதிக்கிறானே என்று அவருக்குப் பொறாமை. ஒருநாள், தன் அண்ணனிடம், ""நீ கொஞ்சநாள் விவசாயத்தைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடு<,'' என்றான். மந்திரியும் ராஜாவிடம் கடும் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கி விட்டார். ஒருநாள் சாலையில் சில வண்டிகள் சென்றன. "எத்தனை வண்டி போகிறது?' என ராஜா பார்த்து வரச்சொன்னார். இவர் ஓடிப்போய் பார்த்து விட்டு பத்து வண்டி போகிறது,'' என்றார். "வண்டியில் என்ன இருக்கிறது?' என்றார். இதை புது மந்திரி கவனிக்கவில்லை. மீண்டும் ஓடிப்போய் பார்த்து வந்து "நெல் மூடை போகிறது' என்றார். "அது என்ன விலை?' என்று ராஜா கேட்க, புது மந்திரி திரும்பவும் ஓடிச் சென்று பதில் வாங்கி வந்தார். இப்படி பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் ஓடிச்சென்றார்.அப்போது பழைய மந்திரி தற்செயலாக வந்தார்.


""ராஜா! பத்து வண்டிகள் நம் அரண்மனையைக் கடந்தன. அதில் 200 மூடை நெல் பாண்டியநாட்டுக்குப் போகிறது. நம் சோழ நாட்டில் மூடைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய் என்பதால், லாபம் கருதி அங்கே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்<'' என தெளிவாகச் சொன்னார். புதுமந்திரி தலை குனிந்தார்.

""நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்கள்'' என்ற பைபிள் வசனப்படி, அவரவருக்கு என விதிக்கப்பட்ட பணிகளை சரியாகச் செய்தாலே வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம்.

உறைந்த நினைவுகள்

மலரென்று உனை எண்ணி மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தந்து வேறெங்கோ நீ
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அது விறகாகிப் போயிருக்கும்
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என் சுவாசம் நிறைந்திருக்கும்

கல்வியும் கடவுளும்

ஒரு இளைஞனுக்கு இறைவனை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். பண்டிதரிடம் தனது விருப்பத்தை சொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும் படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான். ஆனால், இறைவனின் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்புஅடைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். ""இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு இறைவன் தரிசனம் கிடைக்கவில்லையே,'' என்று நினைத்தான்.

சிலகாலம் அமைதியாக இருந்தான். ஒருசமயம், அருகிலுள்ள ஊரில் ஒரு மகான் தங்கியிருப்பதாகவும், மக்களின் குறைகளை நீக்குவதாகவும் அறிந்து அவரிடம் சென்றான். அவரிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான்.

அவனது பேச்சில் கர்வம் இருந்ததை கவனித்த மகான்,""தம்பி! ஒரு நிமிடம் நான் சொல்வதைக்கேள். நீயோ நிறைய கற்றதாகவும், பல அனுபவங்கள் பெற்றதாகவும் சொல்கிறாய். அவற்றையெல்லாம் நான் சோதிக்க வேண்டுமானால் அதற்குரிய அவகாசம் எனக்கு இல்லை. எனவே, உனக்கு என்னென்ன தெரியுமோ, அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதி வா! நான் ஓய்வாக இருக்கும் வேளையில் அவற்றை படித்து உனக்கு கடவுளைக் காணும் பாக்கியம் இருக்கிறதா என்பதை அறிந்து சொல்கிறேன்,'' என்றார்.

மகிழ்ந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பினான். தான் படித்ததையெல்லாம் எழுத ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. பின்பு அவற்றை ஒரு பையில் கட்டி, மகானை சந்திக்கச் சென்றான். மகான் அவனிடம், ""மகனே! உன்னை இவ்வளவு ஏடுகளை படிக்கும் பொறுமை என்னிடம் இல்லை. இதில், தேவையற்றதை நீக்கி, சுருக்கமாக ஒரே ஒரு ஏட்டில் நீ படித்ததன் சாராம்சத்தை மட்டும் எழுதி வா!'' என்றார். இளைஞனும் சில மாதங்கள் முயற்சி செய்து, அவர் சொன்னதைச் செய்தான். அவரைச் சந்திக்கச் சென்றான். அப்போது மகான் அவனிடம், "அடடா! இப்போது எனக்கு முன்புபோல் பார்வை சரியாக இல்லையே!! சரி, இந்த ஏடுகளில் இருப்பதை இன்னும் சுருக்கமாக ஒரு ஏட்டில் எழுதி வா. பதில் சொல்கிறேன்,''என்றார்.

இளைஞன் சளைக்கவில்லை. அதையும் எழுதிக்கொண்டு, இன்னும் சில மாதங்கள் கழித்து அவரிடம் வந்தான். அப்போதும் மகான் அதை படிக்கவில்லை. ""நீ கற்றவற்றை ஒரே ஏட்டில் எழுதி கொண்டு வந்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், இதையே இன்னும் சுருக்கமாக ஒரு வரியில் எழுதிக் கொண்டு வா. உனக்கு பெரிய வேலையும் அல்ல,'' என்று சொல்லி அனுப்பி வைத்தார். இளைஞனும் அதன்படியே வந்தான். ஆனால், அவனுக்கு என்ன எழுதுவதென புரியவில்லை என்பதால் வெற்று ஏட்டுடன் வந்தான்.

மகான் புன்னகையுடன், ""மகனே! உனக்கான பதிலை இப்போது நீயே புரிந்து கொண்டிருப்பாய். நீ கற்றதாக சொன்னதெல்லாம், இந்த வெற்று ஏட்டைப் போன்றது தான். வெறும் கல்வி, இறைவனைக் காண உதவாது. இறைவனைக் காண வேண்டுமானால் முதலில் அவரிடம் மனப்பூர்வமான பக்தி செலுத்து. அதைவிடுத்து "நான் அவ்வளவு படித்தவன், இவ்வளவு தெரிந்தவன்,' என்று பேசுவதால் பயன் ஏதும் ஏற்படாது. இதனால் மனதில் கர்வம் மட்டுமே உண்டாகும்.

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்,''என்றார். உள்ளம் தெளிந்த இளைஞன், மனதில் நம்பிக்கையுடன் கிளம்பினான்.

Thursday, May 21, 2009

நண்பனின் ஒரு விரலே சிறந்தது

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

Wednesday, May 20, 2009

முடிந்த கதையை நினைக்காதே

புத்தர் ஒருமுறை தன் ஆஸ்ரமத்தில் இருந்தபோது ஒரு வாலிபன் வேகமாக வந்தான்.
"மக்களை நல்வழிப்படுத்துவதாக கூறிக் கொண்டு ஏதோதோ தத்துவம் பேசுகிறீரே! உம்மால் அதை கடைபிடிக்க முடியுமா? இந்த வேலையை எல்லாம் இனிமேல் விட்டுவிடும்," என ஆவேசமாகக் கூறியதுடன், அவர் முகத்தில் உமிழ்ந்தே விட்டான்.
அவர் அருகில் இருந்த ஒரு சீடர், "புத்தரே! உத்தரவிடுங்கள், நான் அவனை ஒருகை பார்க்கிறேன்," என ஆவேசமாக எழுந்தார்.
புத்தர் அவரை கைஜாடை காட்டி பொறுமையாக இருக்க வேண்டினார். ஒரு துண்டால் முகத்தை துடைத்தார்.
"சீடனே! ஏன் கோபிக்கிறாய். இதை இத்துடன் விட்டுவிடு. சென்ற பிறவியில் நான் இவருக்கு ஏதோ துன்பம் செய்திருக்கலாம். அதை அவர் இன்று தீர்த்திருக்கிறார். சென்றபிறவியில் இவரிடம் பட்ட பாவக்கடன் இன்றோடு சரிசெய்யப்பட்டு விட்டது. எந்தக்காரியமும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை.
மறுநாள் அந்த நபர் மனம் வருந்தி கங்கைக்கரையில் இருந்த புத்தரிடம் மன்னிப்பு கேட்டான்.
முடிந்ததை நினைக்காதே என்றார் புத்தர்.

ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால்...!

இயேசுகிறிஸ்து எரிகோ என்ற நகருக்கு வந்தார். அவரைத் தேவனின் குமாரன் என நம்பிய பலரும் அவரைக் காண காத்திருந்தனர். பர்திமேயு என்ற கண்ணில்லாத பிச்சைக்காரனும் அவர்களில் ஒருவன். அவன் தெருவோரமாக அமர்ந்து, ""இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்'' என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தான். இயேசு வந்து விட்டார். கூட்டம் நெருக்கியடித்தது. அப்போது, இயேசு அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச்சொன்னார். உடனே சிலர் அவனிடம் சென்று, "திடம்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்' என்றனர். அந்த பிச்சைக்காரன், ஆண்டவரின் கவனம் தன் மேல் விழுந்து விட்டதைப் புரிந்து கொண்டான்.


விசுவாசமும் நம்பிக்கையும் மிக்கவனாய், தன் உடலில் போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை வீசி எறிந்து விட்டு, இயேசுவின் அருகே வந்தான். அவனுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. உடனடியாக பார்வை வந்து விட்டது. அவன் இயேசுவின் பின்னால் சென்றான். சகேயு என்பவன் வாழ்விலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது. இயேசுவைப் பார்க்க கூட்டம் அதிகமாக இருந்ததால், சகேயு என்பவன் ஒரு மரத்தின் மீது ஏறி அவரைப் பார்க்க காத்திருந்தான். அந்தளவுக்கு அவர் மீது அவனுக்கு விசுவாசம். இயேசு அந்த மரத்தின் அருகே வந்ததும், அண்ணாந்து பார்த்து, "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்' என்றார்.


சகேயு மட்டுமல்ல, கூடியிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டனர். "சகேயுவின் பெயர் இவருக்கு எப்படி தெரிந்தது? எவ்வளவோ பணக்காரர்கள் இருந்தாலும், சகேயுவின் வீட்டில் இவர் தங்கப் போகிறாரே?' இப்படி பலவாறான சந்தேகங்கள். ஆனால், இயேசு தன் மீது முழுநம்பிக்கை வைத்து மரத்தின் மீதேறி தன்னைக் கண்ட முன்பின் தெரியாத சகேயுவுக்கே இரங்கினார். நமது ஒவ்வொருவர் பெயரையும் அவர் அறிவார். அவர் நம்மை அழைக்க வேண்டுமானால், அவர் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். செய்வீர்களா!


வரி கட்டி விட்டீர்களா?


அரசுக்குரிய வரி கட்டாமல் ஏமாற்றுவோர் பலர். பைபிள் இச்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறது.


ரோமர் 13:7 வசனத்தில், ""யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள். எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்கு தீர்வை செலுத்த வேண்டியதோ அவனுக்கு தீர்வையையும் செலுத்துங்கள். எவனுக்கு பயப்பட வேண்டியதோ அவனுக்கு பயப்படுங்கள். எவனைக் கனம் பண்ண வேண்டியதோ அவனைக் கனம் பண்ணுங்கள்,'' என்று இயேசு சொல்கிறார்.எனவே, நாம் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும். செலுத்தும் வரியால் நாம் பயனடைவதில்லையே! ஊழல் தானே பிரதானமாக இருக்கிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. அதுபற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், ""உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு அரசாங்கத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்,'' என்றும் பைபிள் சொல்கிறது. ஆட்சியில் இருப்பவர் நல்லவரோ, கெட்டவரோ... அது கடவுளின் இஷ்டப்படி நடந்துள்ளது. அவர்கள் தவறு செய்தால், அவர்களை நியாயந் தீர்க்கிற ஒருநாள் இருக்கிறது. அன்று கடவுளின் முன்னால் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, அதுபற்றிய சிந்தனை இல்லாமல், நாம் நமது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

Tuesday, May 5, 2009

முடியாதது முயலாதது மட்டுமே

ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.

அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.

ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.

இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.

ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.

வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.

இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

பசுங்கிளி ஷங்கர்.

தன்னலமில்லாத சேவை

கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில்அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின்வாங்க அன்னை தெரசா அந்த வேலையைத் தானே மேற்கொண்டு தொடர்ந்தார்.

சிறிதும் முகம் சுளிக்காமல், நெடியைப் பொருட்படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி அந்தத் தொழு நோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. "அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையைச் செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்டார்.

"சகோதரரே! நீங்கள் அனுபவிக்கும் இந்தக் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது நான் செய்வது ஒரு சொல்லத்தக்க விஷயமே இல்லை" என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா.

அன்னையுடைய அந்தத் தன்னலமில்லாத சேவைக்கு இணையாக அந்தத் தொழுநோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்.

பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை. அதுவும் கஷ்ட காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும்படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை. தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் கட்டை பிடித்து மிதக்க உதவுவதைப் போல அந்த நல்ல வார்த்தைகள் கஷ்டகாலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவனுக்கு உதவுகின்றன.

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், தைரியசாலிகள் கூட சில சமயங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்.

மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள். வருத்தங்களும் தோல்விகளும் சகஜமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள். அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். பிறையாகத் தோன்றும் எல்லாமே முழுநிலவாகிப் பிரகாசிப்பதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போயிருக்கின்றன. ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.

இன்றைய நாட்களில் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது. எத்தனையோ சௌகரியங்களும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றக்குறையாலும், நேரப்பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை.

அன்னை தெரசாவைப் போல் தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாமில்லையா? அதற்கு என்ன செலவு இருக்கிறது? அதில் என்ன சிரமம் இருக்கிறது? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல காரியத்தை நாம் செய்ய ஆரம்பிப்போமா!

மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும். நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. என்ன தான் தலைகீழாய் நின்றாலும் அடுத்தவர் மேல் நம் கருத்தைத் திணிக்க முடியாது. முல்லா வழக்குக்கு முன்னும் அந்தத் தலைவரைக் கழுதையாகத் தான் நினைத்தார். நீதிபதியின் தீர்ப்பிற்குப் பின்னும் அவர் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

ஒவ்வொருவரும் அடுத்தவரை தங்கள் அளவுகோல்களை வைத்தே அளக்கிறார்கள். அவர்களைப் பற்றி அபிப்பிராயம் கொள்கிறார்கள். எனவே அடுத்தவர் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன தான் நீங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் அவர்கள் தங்கள் கருத்தை எளிதாக மாற்றிக் கொள்வதில்லை. அதுவும் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தற்பெருமை பேசினால் அது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

உங்கள் குணாதிசயங்கள், நீங்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் தான் நீங்கள் யாரென்று வெளியுலகிற்கு அழுத்தமாகப் பிரசாரம் செய்கின்றன. மற்றவர்கள் அதை வைத்தே உங்களை எடை போடுகிறார்கள். எனவே உங்களைப் பற்றி அதிகம் நீங்களே சொல்லிக் கொள்வது தேவையற்றது.

அதே நேரத்தில் அடுத்தவருக்குப் பிடிக்கிற மாதிரியெல்லாம் நடந்து கொண்டு பேரெடுக்க முயற்சி செய்யாதீர்கள். சில நாட்களிலேயே தோற்றுப் போவீர்கள். இறைவனால் கூட தொடர்ந்து மனிதனிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை. இறைவனாலேயே முடியாதது உங்களால் முடிந்து விடுமா என்ன?

மற்றவர்கள் எண்ணத்தில் உயர வேண்டுமானால் -

உங்களைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்வதைத் தவிருங்கள்.

ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அடிக்கடி ஆராயப் போகாதீர்கள்.

உங்கள் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள்.

அப்படியும் ஒருசில சமயங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறை விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

- இவற்றைப் பின்பற்ற முடிந்தால் நீண்டகாலம் நீங்கள் பெரும்பாலானவர்களின் உயர்ந்த கருத்தில் இருக்க முடிவது உறுதி.

பசுங்கிளி ஷங்கர்.

நன்றி: விகடன்