Wednesday, May 20, 2009

ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால்...!

இயேசுகிறிஸ்து எரிகோ என்ற நகருக்கு வந்தார். அவரைத் தேவனின் குமாரன் என நம்பிய பலரும் அவரைக் காண காத்திருந்தனர். பர்திமேயு என்ற கண்ணில்லாத பிச்சைக்காரனும் அவர்களில் ஒருவன். அவன் தெருவோரமாக அமர்ந்து, ""இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்'' என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தான். இயேசு வந்து விட்டார். கூட்டம் நெருக்கியடித்தது. அப்போது, இயேசு அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச்சொன்னார். உடனே சிலர் அவனிடம் சென்று, "திடம்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்' என்றனர். அந்த பிச்சைக்காரன், ஆண்டவரின் கவனம் தன் மேல் விழுந்து விட்டதைப் புரிந்து கொண்டான்.


விசுவாசமும் நம்பிக்கையும் மிக்கவனாய், தன் உடலில் போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை வீசி எறிந்து விட்டு, இயேசுவின் அருகே வந்தான். அவனுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. உடனடியாக பார்வை வந்து விட்டது. அவன் இயேசுவின் பின்னால் சென்றான். சகேயு என்பவன் வாழ்விலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது. இயேசுவைப் பார்க்க கூட்டம் அதிகமாக இருந்ததால், சகேயு என்பவன் ஒரு மரத்தின் மீது ஏறி அவரைப் பார்க்க காத்திருந்தான். அந்தளவுக்கு அவர் மீது அவனுக்கு விசுவாசம். இயேசு அந்த மரத்தின் அருகே வந்ததும், அண்ணாந்து பார்த்து, "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்' என்றார்.


சகேயு மட்டுமல்ல, கூடியிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டனர். "சகேயுவின் பெயர் இவருக்கு எப்படி தெரிந்தது? எவ்வளவோ பணக்காரர்கள் இருந்தாலும், சகேயுவின் வீட்டில் இவர் தங்கப் போகிறாரே?' இப்படி பலவாறான சந்தேகங்கள். ஆனால், இயேசு தன் மீது முழுநம்பிக்கை வைத்து மரத்தின் மீதேறி தன்னைக் கண்ட முன்பின் தெரியாத சகேயுவுக்கே இரங்கினார். நமது ஒவ்வொருவர் பெயரையும் அவர் அறிவார். அவர் நம்மை அழைக்க வேண்டுமானால், அவர் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். செய்வீர்களா!


வரி கட்டி விட்டீர்களா?


அரசுக்குரிய வரி கட்டாமல் ஏமாற்றுவோர் பலர். பைபிள் இச்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறது.


ரோமர் 13:7 வசனத்தில், ""யாவருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள். எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்கு தீர்வை செலுத்த வேண்டியதோ அவனுக்கு தீர்வையையும் செலுத்துங்கள். எவனுக்கு பயப்பட வேண்டியதோ அவனுக்கு பயப்படுங்கள். எவனைக் கனம் பண்ண வேண்டியதோ அவனைக் கனம் பண்ணுங்கள்,'' என்று இயேசு சொல்கிறார்.எனவே, நாம் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும். செலுத்தும் வரியால் நாம் பயனடைவதில்லையே! ஊழல் தானே பிரதானமாக இருக்கிறது என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. அதுபற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், ""உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு அரசாங்கத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்,'' என்றும் பைபிள் சொல்கிறது. ஆட்சியில் இருப்பவர் நல்லவரோ, கெட்டவரோ... அது கடவுளின் இஷ்டப்படி நடந்துள்ளது. அவர்கள் தவறு செய்தால், அவர்களை நியாயந் தீர்க்கிற ஒருநாள் இருக்கிறது. அன்று கடவுளின் முன்னால் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, அதுபற்றிய சிந்தனை இல்லாமல், நாம் நமது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment