Friday, May 22, 2009

நல்வழியில் செல்வோம்

நபிகள் நாயகத்திடம் அவரது தோழர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.ஒருமுறை ஏழை ஒருவர் நாயகத்திடம் வந்தார்.
"அண்ணலே! எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இவர்களை திருமணம் செய்து கொடுக்க என்னிடம் பணமில்லை. நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்," என்றார்.நாயகம் சூஇல்லை' என சொன்னால் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் தான் சொல்வார். அது என்ன தெரியுமா? சூஅல்லாஹ்வுக்கு நிகராக வேறு தெய்வம் இல்லை' என்பார். அதே நேரம், நாயகமே மிகுந்த கஷ்டப்பட்ட நிலையில் இருக்கும்போது, அந்த ஏழைக்கு உதவ அவரால் முடியவில்லை. இருப்பினும், அவரை வெறுங்கை யுடன் அனுப்ப மனமில்லாமல், அவ்வூர் செல்வந்தர் ஒருவரிடம் அனுப்பி வைத்து, "நண்பரே! தாங்கள் அவரிடம் அல்லாஹ்வின் பெயரால் உதவி கேளுங்கள்," என்றார்.
அவரும் செல்வந்தரிடம் சென்று, இறைவனின் பெயரால் உதவி கேட்டார். செல்வந்தர் அவருக்கு பத்து திர்ஹம் கொடுத்தார். இவ்வளவு சிறிய தொகையைக் கண்டு வந்தவர் திகைத்தார். அவர் நாயகத்திடம் ஓடிச்சென்று, நடந்ததைச் சொன்னார்.
இப்போது நாயகம் அவரிடம், "மீண்டும் அவரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரின் (நாயகம்) பெயரால் உதவி செய்யுங்கள் எனகேளுங்கள்," என்றார். அவரும் மீண்டும் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதரின் பெயரால் உதவி செய்யுங்கள்," என்றதும், செல்வந்தர் பரவசமாகி விட்டார். ஓடிச்சென்று, வீட்டில் இருந்த அனைத்து செல்வத்தையும் எடுத்து வந்து, "எடுத்துக் கொள்ளுங்கள். எனது பெரும் தலைவரின் பெயரைச் சொல்லிக் கேட்ட நீங்கள் குறையுடன் போகக்கூடாது," என்றார். அந்த ஏழை மனிதர் குழம்பி விட்டார்.
ஒரு பொருளைக் கூட அவர் எடுக்கவில்லை. நாயகத்திடம் ஓடிச்சென்று, "அண்ணலாரே! இறைவன் பெயரைச் சொல்லி கேட்ட போது பத்து திர்ஹம் தந்தவர், தங்கள் பெயரைச் சொல்லிக் கேட்டதும் எல்லா பொருளையும் தந்து விட்டாரே? எனக்கு ஏதும் புரியவில்லையே?" என்றார். நாயகம் அந்த செல்வந்தரையே அழைத்து வரச்செய்தார். அவரிடம், இதுபற்றி கேட்டார்.
"இறைவனின் திருத்தூதரே! இறைவனைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? இருளில் உழன்று கொண்டிருந்த எங்களுக்கு, சூஇறையென்னும் பேரொளி இதோ' என சுட்டிக்காட்டி, எங்களுக்கு வழிகாட்டி, எங்களை நேர்வழியில் செலுத்த வந்தவர் நீங்களல்லவா? உங்களைத்தானே எங்களுக்கு நன்கு தெரியும். இறை யென்னும் பேரொளியை உங்கள் கண்கள் மூலம் தானே தெரிந்து கொண்டோம்," என நெகிழ்ந்து கண்ணீர் வழிய சொன்னார்.
பார்த்தீர்களா! "இறைவனே எல்லாம்! எல்லாப்புகழும் இறைவனுக்கே! அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கின்றான். அல்லாஹ் யாவையும் செவியுறுவோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்பவனாக இருக்கின்றான். அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவாளனுமாக இருக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமான மதி நுட்பமுடையவனாக இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் குற்றங்களை மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான்," என்று சொல்லும் குர்ஆன் அவன் மூலமாக நாயகத்துக்கு தரப்பட்டது. நாயகம் இவற்றை உலகத்துக்குப் போதித்தார்.
இறைவனின் பாதையில், பெருந்தகை நாயகம் போதித்த நல்வழியில் செல்ல உறுதியெடுப்போம்.

No comments:

Post a Comment