Thursday, June 11, 2009

பாரதியார்

ஒரு சமயம் பாரதியாரும் அவரது துணைவியார் செல்லம்மாளும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று பாரதியாருக்குக் குஷி வந்து விட, நல்ல ராகதாளத்தோடு பாட ஆரம்பித்து விட்டார்.
அந்த பாட்டைக் கேட்டு கடற்கரையில் அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் அவர் பக்கம் திரும்பினர். பிறகு அவரைச் சுற்றி கூடி அமர்ந்து அவரது பாட்டை ரசிக்கத் தொடங்கினர்.
திடீரென்று—
மிக அருகில் வேறொருவர் பாடும் சத்தம் கேட்டது. அந்தப் பாட்டுச் சத்தம் காதில் விழுந்ததும், பாரதியாரைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் திரும்பிப் பார்த்தனர். கட்டுமரம் ஒன்றை சரி செய்தபடி ஒரு மீனவர் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் எழுந்து அவரிடம் ஓடினர்.
வினாடி நேரத்தில் அத்தனை பேரும் மீனவரின் பாட்டைக் கேட்க ஓடிவிட, பாரதியாரும் செல்லம்மாளும் மட்டும் தனித்து விடப்பட்டனர்.
உடனே பாரதியார் தான் பாடுவதை நிறுத்தினார். கோட்டு பாக்கெட்டிலிருந்து பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக் கொண்டு அவரும் மீனவரின் அருகே ஓடினார். செல்லம்மாள் அவரைப் பின் தொடர்ந்தார்.
மீனவரின் அருகே சென்ற பாரதியார் அவர் பாடல் வரிகளை காகிதத்தில் வேகமாக எழுதத் தொடங்கினார்.
மீனவர் பாடி முடித்ததும் பாரதியார் அவர் கைகளைப் பிடித்து, ""ஐயா! நீங்கள் தான் என் குரு!'' என்றார்.
அதைக் கேட்டு மீனவர் உள்பட கூடியிருந்த மக்கள் அனைவரும் திகைத்தனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் பாரதியாரைப் பார்த்து, ""ஐயா! பாரதி அவர்களே! தங்களின் கவித்திறன் என்ன... புலமை ஞானம் என்ன, இசைக் கோவை என்ன... தாங்கள் போய் அந்த மீனவரைக் குரு என்கிறீர்களே!'' என்று கேட்டார்.
அதற்குப் பாரதியார் மெல்லப் புன்னகைத்து, ""உலகில் எந்தப் பாட்டு அல்லது இசை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவர்ந்து இழுக்கிறதோ அதுதான் மிக உயர்ந்த பாட்டு. அந்த உயர்ந்த நிலை கல்விமான்களிடத்தில் இருந்துதான் வர வேண்டுமென்பதில்லை. கல்வி கல்லாதோரிடமிருந்தும் வரும். அந்த நிலை யாரிடமிருந்து வந்தாலும் அவரை என் குருவாக நான் ஏற்றுக் கொள்வேன். இந்த மீனவரின் பாடல், ராகம், தாளம் என்ற கட்டுக்கோப்பை மீறியிருந்தாலும், அது என் உள்ளத்தைத் தொட்டு விட்டதால் அந்தப் பாட்டுக்கு நான் அடிமை!'' என்றார்.

அவரது பதிலைக் கேட்டு, மீனவர் உள்பட கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டனர்.

No comments:

Post a Comment