Monday, June 15, 2009

சிரிப்பு

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. இன்று எம்மில் எத்தனை பேர் வாய் விட்டுச் சிரிக்கின்றோம் என கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சிரிப்பு என்பது ஆண்டவன் எமக்கு வழங்கி இருக்கும் அருட் கொடைகளுள் ஒன்றாகும். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் சிரிக்கத் தெரிந்த பிராணி மனிதன் மட்டும்தான் என்பது எவ்வளவு அற்புதமான படைப்பு.

சிரிப்பு ஒரு மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றது, உடல், உணர்வு ரீதியாக அவனை உற்சாகப்படுத்துகின்றது. வள்ளுவர் ""இடுக்கண் வருங்கால் நகுக'' என்கின்றார். துன்பம் வரும் வேளையில் கூட சிரியுங்கள். அத் துன்பம் எல்லாம் எமக்கு ஒரு தூசியாய் தெரியும். சிரிப்பு எம்மிடம் இருக்கும் இயற்கையான ஒரு கை மருந்து. இதன் மூலமே பல நோய்கள் பறந்தோடி விடும். அதைவிடுத்து நாம் நவீன ரக செயற்கையான மருந்துகளை அல்லவா தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு மனிதன் தன்னை மறந்து சிரிக்கும் போது அவனது ஆயுளும் கூடுகின்றது. அழகும் மிளிர்கின்றது. சிலரது சிரிப்பை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இலகுவில் ஊகித்தும் விடலாம். அந்த வகையில் கண் பார்த்து சிரிப்பவன் காரியவாதி, ஓட விட்டுச் சிரிப்பவன் கயவன், போக விட்டுச் சிரிப்பவன் குள்ளன், ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன், துன்பத்தில் சிரிப்பவன் தான் மனிதன் என்கின்றார்கள்.

சிரிப்பு மனிதனுக்கு இருக்கும் சிறப்பு அம்சம். ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் கண்ணாடிக்கு முன்னால் நின்று உங்களையே நீங்கள் பார்த்து, ரசித்து புகழ்ந்து சிரித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் வரும். உங்களை அழகுபடுத்துவதற்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்படாது, உங்களை அலங்கரிக்க பொன் நகைகளும் தேவைப்படாது.

ஒரு புன்னகையே போதும். இந்த உலகையும், மற்றவரையும் தம்வசப்படுத்தி விட என்றால் சிரிப்பிற்கு இருக்கும் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிகின்றதல்லவா? சிரிப்பதற்கு தயக்கம் காட்டக்கூடாது.

என்ன சிரிப்பில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா என யோசிக்க வேண்டாம். சிரிக்கத் தெரிந்த மிருகத்திற்குத்தான் மனிதன் என்று பெயர். சிரிக்க மறந்த மனிதனுக்கோ மிருகம் என்று பெயர்

1 comment:

  1. மனிதன் மைனஸ் சிரிப்பு =மிருகம்

    ReplyDelete