Tuesday, March 3, 2009

அன்புள்ள அப்பா

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது.
'
அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்

அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.

வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.

வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.

எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.

உங்கள் அன்பு மகள்,
இளவேனில்

படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா

1 comment:

  1. இரு கோடுகள் தத்துவம்...

    ReplyDelete