Monday, March 16, 2009

வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

ஒரு பணக்காரத்தந்தை தன் 12 வயது மகனை அழைத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார்.

ஏழை மக்கள் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்துவதற்காகவும்,அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தனது மகன் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தந்தையும், மகனும் கிராமத்தில் வசித்தனர். வயல்வெளிகளிலும், நிலாவெளிச்சத்திலும் சுற்றித் திரிந்தனர். பின் குறிப்பிட்ட தினத்தில் தனது சொந்த இருப்பிடத்திற்கு திரும்ப வந்துவிட்டனர்.

வீடு திரும்பியதும் தந்தை மகனிடம் கேட்டார் - “சொல் மகனே!, இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய்?”.

அவரது எண்ணம் என்னவெனில், கிராமத்தைப் பற்றியும், மக்கள் படும் கஷ்டத்தையும் மகன் வாயால் கூறக் கேட்கவேண்டும் என்பதே.

மகன் சொன்னான் :

தந்தையே நாம் ஒரே ஒரு நாய்தான் வைத்திருக்கிறோம். அங்கே அந்த ஏழைகள் அவரவர் வீடுகளில் நான்கைந்து நாய்கள் வளர்க்கின்றனர்.

நம் வீட்டு நீச்சல் குளம் நமது தோட்டத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் நீந்துவதற்காக மிகப்பெரிய ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றின் எல்லையை என்னால் காண இயலவில்லை.


நாம் இரவு வெளிச்சத்திற்காக நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையுள்ள வண்ண அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் விலைமதிப்பே இல்லாத வானத்து நட்சத்திரங்களையும், வண்ண நிலவையும் இரவு வெளிச்சத்திற்காக உபயோகிக்கின்றனர்.

நாம் வாழ்வதற்காக மிகச் சிறிய நிலப்பரப்பையே வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் பரந்துவிரிந்த நீளமான வயல்வெளிகளையும், தோட்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

நமக்கு வேலைசெய்வதற்காக நாம் வேலையாட்களை வைத்திருக்கிறோம். வேலையாட்கள் நமக்கு உதவுகிறார்கள். நாம்தான் யாருக்கும் உதவுவதில்லை.
ஆனால் கிராமத்து மக்களோ அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், பிறருக்குச் சேவைசெய்வதிலும் இன்பம் கொள்கிறார்கள்.

இவையனைத்தையும் கேட்டதும் பணக்காரத் தந்தைக்குப் பேச்சே வரவில்லை.

இறுதியாக மகன் சொன்னான் - “மிக்க நன்றி தந்தையே!. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எனக்குக் காட்டியமைக்கு நன்றி”.

நீதி :
பார்வையும், பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. தந்தையின் பார்வைக்கும், மகனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
நம்மிடம் இல்லாதது வேறு ஒருவரிடம் இருக்கும். அவரிடம் இல்லாதது நம்மிடம் இருக்கும். ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இருந்தால் வாழ்வு மலர்ச்சியுடன் இருக்கும். நம்மிடம் இருப்பவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழும் வாழ்வே சிறப்பானது.

No comments:

Post a Comment