Friday, May 29, 2009
தாயும் மகளும்
உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,
பகலிரவாய் கண்விழித்துக் காத்து,
தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,
விதவிதமாய் உணவு செய்து ஊட்டி,
எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்து,
அழகிய துணிமணிகள் வாங்கித் தந்து,
உயரிய நகைகள் பூட்டி அழகு பார்த்து,
பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து,
துன்பம் என்பதே அறியாமல்,
வளர்த்து பெரியவளாக்கினாள் தாய்.
யாரோ ஒருவனை எங்கோ பார்த்து,
கண்ணால் பேசி மனதை பறிகொடுத்து,
தாயென்ன..அவன்தான் தன்னுயிரென,
தயங்காமல் ஓடிப்போனாள் மகள்.
Thursday, May 28, 2009
பெத்த மனசு..
ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அந்த அம்மா என்னருகே வந்தார். சன்னமான குரலில், "தம்பி ஒரு ரூபா குடுக்கறியா...டீ சாப்புடனும்"
நான் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பதில்லை. கோபமாக அவரைப் பார்த்து பேச நினைத்தவன், அந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.
"அம்மா.....நீங்களா?... எ... எ... என்னம்மா இது? நீ...நீங்க போய்..."
அவர் முகத்தில் திடீரென்று ஒரு கலவரம் தோன்றியது. சட்டென்று முந்தானையை தலைமேல் முக்காடாய் போட்டுக்கொண்டு அவசரமாய் அந்த இடத்தைவிட்டு விலகி வேகமாய் நடந்தார்.
என் அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓடினாரென்றே சொல்லலாம். நான் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. அப்போதுதான் வந்து நின்ற நகரப் பேருந்திலிருந்து கூட்டமாய் இறங்கியவர்களில் சிலர் என்னை
உரசிக்கொண்டு போனதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
பின்னாலிருந்து யாரோ என் பெயரைச்சொல்லி அழைத்து, பின் என் தோளைத் தொட்டுத் திருப்புவதை உணர்ந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தேன்.
"என்னடா முரளி...பட்டப்பகல்ல பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு கனவு காண்றியா...?
சிரித்துக்கொண்டே கேட்ட என் வகுப்புத்தோழன் பரமேஷைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை சிந்திவிட்டு, "டே பரமேஷ்... மதனோட அம்மாவைப் பாத்தண்டா... அவங்க..."
"தெரியுண்டா. அதான் அப்படி அதிர்ச்சியா நின்னுட்டியா. இல்லாம இருக்குமா? பாவம்டா அவங்க"
"என்னடா என்ன ஆச்சு?"
"அது ஒரு பெரிய கதைடா. அதப்பத்தி அப்புறம் பேசலாம். நீ எப்ப வந்த? இப்ப எங்கருக்க? வைஃப், பொண்ணு எல்லாம் நல்லாருக்காங்களா?"
"எல்லாம் நல்லாருக்காங்கடா. நேத்துதான் வந்தேன். இப்ப ONGCயில இல்லை, GAILக்கு மாறிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னதான் என்னை குணாவுக்கு மாத்தினாங்க"
"குணாவா... என்னடா கமல் படப்பேரெல்லாம் சொல்ற"
"டே இது ஒரு ஊர்டா. மத்திய பிரதேசத்துல இருக்கு. அங்க எங்களுக்கு ஒரு பூஸ்டர் ஸ்டேஷன் இருக்கு. அதுல ஷிஃப்ட் இன்சார்ஜா இருக்கேன்."
"ஓ... பொண்ணு இப்ப சிக்ஸ்த் இல்ல?"
"ஆமாடா"
"சரி வா காப்பி சாப்புட்டுகிட்டே பேசலாம்"
சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளின் இடையே இருந்த அந்த சிறிய உணவு விடுதிக்குச் சென்று, நாற்காலியிலிருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்த பரமேஷ், என்னையும் அமரச் சொன்னான். இரண்டு காஃபி சொல்லிவிட்டு, மேலும் தாங்கமுடியாதவனாக மதனின் அம்மாவைப்பற்றிக் கேட்டேன்.
"எப்படி இருந்த குடும்பம்... நம்ம கிளாஸிலேயே அவன் குடும்பம்தானடா பணக்கார குடும்பம். ஒரு லாயர் பையன்ங்குறதுல அவனுக்கு அப்பவே பெருமை ஜாஸ்தி. எத்தனை தடவை அவனோட அம்மாக் கையால சாப்பிட்டிருப்போம். அவங்களை இந்த நிலையில பாக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா..."
"என்னடா செய்யறது. எல்லார் வாழ்க்கையிலும் விதி விளையாடும். மதன் வாழ்க்கையில அவனோட தான்தோன்றித்தனமும், அவன் அண்ணனோட சதியும் தாண்டா விளையாடிடிச்சி"
"அவன் தான் பத்தாவது ஃபெயில் ஆனதுக்கப்புறமா படிப்பு ஏறலன்னு நின்னுட்டானேடா. அதுக்கப்புறம் டான்சியில் ஏதோ கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். போன வருஷம் லீவுல வந்திருந்தப்பக்கூட அவனைப் பாத்தேனே... அப்பக்கூட குடிச்சிட்டு பொலம்புனான். நீங்கள்லாம் நல்ல நிலையில இருக்கீங்கடா... என் பொழப்பப்பாருடா... யாரும் பொண்ணுகூட குடுக்க மாட்டங்கறாங்கன்னு."
"அதே பாழாப்போன குடிப்பழக்கம்தாண்டா அவனுக்கு வில்லன். நீ வந்து போனதுக்கப்புறமா அவங்கப்பா திடீர்ன்னு அட்டாக்குல போயிட்டாரு. சொத்து பிரிக்கறப்ப அவங்க அண்ணன் இவனை நல்லா ஏமாத்திட்டாருடா. குடிகாரன், பொண்டாட்டி
புள்ளைங்க வேற இல்லன்னு கொஞ்சமா ஏதோ பேருக்கு குடுத்துட்டு எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டாரு. கொஞ்சநாள் அவங்க அக்கா வீட்டுலத்தான் இருந்தான். அவங்க அக்கா அண்ணனுக்கு மேல. குடிபோதையில இருந்தவன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க. அவனையும் வீட்லருந்து
தொரத்திட்டாங்க."
பரமேஷ் சொல்லச் சொல்ல... மூணு வருடம் முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த சொத்து பிரிப்பு என் நினைவில் ஆடியது. அப்பா இறந்த பிறகு, டவுனில் ஒரு பெரிய வீடும், கிராமத்தில் ஒன்றரை ஏக்கராவில் தென்னந்தோப்பும் மட்டுமே எங்க சொத்து.
அண்ணனுக்கு பெருசா வருமானம் இல்ல. அதுவுமில்லாம மூணு குழந்தைங்க. அதுல ரெண்டு பொண்ணு. அதான் நானே அந்த வீட்டை அவருக்கே விட்டுக்கொடுத்திட்டேன். கிராமத்துல இருந்த நிலத்தை மட்டும் நான் வெச்சுக்கிட்டேன். அம்மா இப்ப அண்ணன் கூடத்தான் இருக்காங்க.
அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்கிட்ட ஒரு நன்றியுணர்ச்சி எப்பவும் இருக்கும். அந்த நிகழ்ச்சியையும், மதனின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது... உறவுகளுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள் எனத் தோன்றியது.
"என்னடா யோசனையில இருக்கே?"
"ஒண்ணுமில்லடா... சொந்தம், பந்தம், உறவு எல்லாம் பணத்துக்கு முன்னால செல்லாக்காசாப் போச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்குடா."
"அப்படியும் சொல்ல முடியாதுடா. உங்க வீட்லக் கூடத்தான் சொத்து பிரிச்சாங்க. நீ எவ்ளோ பெருந்தன்மையா அந்த வீட்டை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தே. இப்பவும் அண்ணனை நான் பாக்கறப்பல்லாம் உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசுவாரு"
என் மனதில் ஓடியதையே அவனும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல நட்பு என்பது இப்படித்தான் ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது.
"சரிடா... அவனைத்தான் ஏமாத்திட்டாங்க, அவங்க அம்மா ஏண்டா பிச்சை எடுக்கணும்?"
"அவங்க பிச்சை எடுக்கறது அவங்களுக்காக இல்லடா... கெட்டுப்போன தன்னோட சின்ன மகனுக்காக. வீடும் இல்லாம வாசலும் இல்லாம, தெருத்தெருவா அவன் அலைஞ்சி, அஞ்சுக்கும் பத்துக்கும் யார்யார்கிட்டவோ அடி வாங்கி அவமானப்பட்டதைப் பாக்க சகிக்காம, பெரிய மகன்கிட்டபோய் அழுதிருக்காங்க. அதுக்கு அவன், அந்தக்
குடிகாரனுக்காக ஒத்த பைசா குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட இப்ப ஒண்ணுமே இல்லையேடா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு கேட்டதுக்கு, முடிஞ்சா வேலை செய்யச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கான்.
அதைக் கேட்டுத் தாங்க முடியாமத்தான் அவங்களே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சாராயத்துக்காக. அது இல்லன்னா அவன் சீக்கிரமே செத்துப்போயிடுவானோனு பயந்துகிட்டு, இப்படி பிச்சை எடுத்து பத்து ரூபா சேர்ந்தா போதும்... ரெண்டு பாக்கெட் சாராயத்தை வாங்கிக்கிட்டு சத்திரத்துக்குப் போயி அவன் கிட்ட குடுத்துட்டு வருவாங்க. சில சமயம் சாராயம் இல்லாம போனா அவன் குடுக்கற அடியையும் வாங்கிட்டு வருவாங்க."
"கடவுளே... என்ன கொடுமைடா இது. அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளி அள்ளி சோறு போட்டவங்களாச்சேடா... மனசு கேக்கலடா...வா போயி மதனைப் பாத்துட்டு வரலாம்."
இரண்டு பேரும் போன போது அவனோடு அவனுடைய அம்மாவும் இருந்தார். குடித்துவிட்டு சுயநினைவில்லாமலிருந்த மதனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். அது பிச்சைக்காரர்களின் தங்குமிடமான ஒரு பழங்காலத்து சத்திரம். கோணிப்பைகள்தான் அவர்களின் படுக்கைவிரிப்பு. பகலிலேயே இருளடைந்திருக்கும். மதனுக்குப் பக்கத்தில் முழுவதுமாக சாப்பிடப்படாத இட்லிகள் இருந்த பொட்டலத்தை தரையில் பார்த்ததும் விளங்கிவிட்டது உணவு உண்ணக்கூட முடியாத நிலையில் அவன் இருக்கிறானென்று.அவர்களை அந்த நிலையில் பார்த்தபோது என்னையறியாமல் கண்கள்
கலங்கிவிட்டன.
எங்களைப் பார்த்ததும் அம்மா அதிர்ந்துவிட்டார்கள். பின் மெள்ள அதிர்ச்சி சோகமாகி விசும்பி அழத்தொடங்கியதும், அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்ததும் கதறி அழுதுவிட்டார்.மேலே எதுவும் பேசி அவரது மன ரணங்களைக் கீறிவிட
விருப்பமில்லாதவனாக பையிலிருந்து கொஞ்சம் பணத்தை அந்தத் தாயின் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விலகினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த பரமேஷ்...
"ஏண்டா பணம் கொடுத்தே... இன்னும் சாராயம் குடிச்சி சாகட்டுன்னா?"
"நானும் நீயும் குடுக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது வாங்கி மகனுக்கு குடுக்கத்தான் போறாங்க அவங்கம்மா. இந்தப்பணத்துனால அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் குறையட்டுமேடா. மனசு வலிக்குதுடா...குடி குடியைக்
கெடுக்குன்னு சொல்வாங்க ஆனா இங்க இவனுடைய குடி அன்னலட்சுமியையே பிச்சைக்காரி ஆக்கிடுச்சேடா..."
என் தோளைப் பிடித்து ஆறுதலாய் கூட நடந்து வந்தவன், சற்றுதூரம் வந்ததும் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு போய்விட்டான்.
மூன்று மாதத்துக்குப் பிறகு உறவினர் ஒருவரின் துக்கக்காரியத்தில் பங்கு கொள்ள மீண்டும் ஊருக்கு வந்திருந்தேன். அந்தமுறையும் மதனின் அம்மாவை மீண்டும் சந்தித்தேன். வேறு இடத்தில். பக்கத்திலிருந்தவர்களிடம் என்னவோ
சொல்லிக்கொண்டிருந்தார். அருகே சென்றேன்.
அவர் பிச்சைக் கேட்கவில்லை... ஆனால் பார்ப்பவர்களிடமெல்லாம், "என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்... என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.." என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். மதன் இறந்ததற்காக மனம் வருந்தவில்லை. அவன் மரணம் ஒரு மனுஷியை பிணமாக்கிவிட்டதே என நினைத்த போது மனம் கனத்தது. முழுவதுமாய் மனம் பிறழ்ந்த அந்த பெரியமனுஷி... இப்போது பிச்சைக்காரியிலிருந்து பைத்தியக்காரியாகிவிட்டிருந்தாள்.
காத்திருக்கிறது என் இதயம்.
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும்,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவாசிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம்.
அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும்...
அப்பா...
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்
சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்
தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்
நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது
காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது
எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!
வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்...
அம்மாவின் ஆன்மிக கருத்துக்களும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவுக்கண்னை திறந்தது எனலாம்
புலம் பெயரும் வரை...
மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்
இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை...
இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...
மலரும் நினைவுகள் !!!
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!
நினைவுகள் அழிவதில்லை
பசுமைப் புல்வெளியும்
பரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்
பதில் அளிக்கவே-எதிரொலியால்
பதில் அளிக்கவே படைக்கப்பட்ட பனை உயர மலைகளும்
பருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்
பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்
பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.
பதிலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்
ஏன் தேடுகிறாய் என
ஏ.சி அறையின் சுவர்கள்
ஏளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று
நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!
நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில
கவிராயனும் கொல்லனும்
பாரதியரின் சிறுகதைகளில் ஒன்று
ஐரோப்பாவில் மகா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு நாள் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப் பட்டது . அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம் போன படிக்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்து விட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறைலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறு மாறாக மாற்றி வைத்துக் குழப்பமுண்டாக்கத் தொடங்கினார்.
கொல்லன் கோபத்துடன் "நீ யாரடா பயித்தியம் கொண்டவன்? என்னுடைய சாமான்களையெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்" என்றான்.
"உனக்கென்ன?" என்று கேட்டார் கவிராயர்.
"எனக்கென்னவா? என்னுடைய சொத்து தம்பீ, என்னுடைய ஜீவனம்" என்றான் கொல்லன்.
அதற்குக் கவிராயர், "அது போலவே தான் என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே. என்னுடைய பாட்டை நீ தவறாகப் பாடித் தாறுமாறாகக் கலைத்தாய். எனக்கு அது தான் ஜீவனம் . இனிமேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே." என்று சொல்லிவிட்டுப் போனார்.
