Wednesday, June 3, 2009

என் மகளின் ஞாபகம்

நான்
தனியாக தேதி கிழிக்கையில்
தனியாக சவரம் செய்து கொள்கையில்
தனியாக உணவு அருந்துகையில்
தனியாக சாலையைக் கடக்கையில்
தனியாக உட்கார்ந்து இருக்கையில்
தனியாக புகைக்கையில்
தனியாக தேநீர் குடிக்கையில்
தனியாக நேரம் பார்க்கையில்
தனியாக மழையில் நனைகையில்
பூத்துக் கொண்டேயிருக்கிறது
குட்டி மகளின் ஞாபகம்.

இலங்கை சகோதரனுக்கு/சகோதரிக்கு.....

ஆர்மிகாரனின் தோட்டாக்கள்
உன்னை துளைக்கும் பொழுது
என் மேலும் பட்டு தெறித்தது,
உன் ரத்த துளிகள்.
என் ரத்தம் கொதித்தது...
உள்ளம் துடித்தது...
ஏன் என்றால் நான் இந்தியன்.

முல்லைத்தீவில்
பள்ளிக்கூடத்தின் மீது
குண்டுகள் விழுந்து
துண்டுகள் ஆனது..
அங்குள்ள மொட்டுகள்
மட்டுமல்ல..
எனது இதயமும்...

நீங்கள் நிராகரிக்கப்படவில்லை...
நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்களுக்காக கண்ணீர் வடிக்கும்
இந்தியனால்...
நமக்குள்
தொப்புள் கொடி உறவில்லை என்றாலும்
தனுஷ்கோடி உறவு உள்ளது..
நான் உன் சகோதரன்.
நான் உன் இனம்...

பிணங்களின் குவியல்களில் ,
நீ
உன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...
நான்
உன்னை தேடி கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால்...
நீ என் உறவு...

நான்
அமெரிக்காவில் இருந்தாலும்
என் சகோதரன்
இந்தியாவில் இருந்தாலும்...
நீ
இலங்கையில் இருந்தாலும்...
நம்மை இணைக்கும் பாலம் தமிழ்...
இதில்,
இந்தியன் தமிழன் ,
இலங்கை தமிழன்..
மலேசிய தமிழன்
என
கூறுபோட்டு பார்க்க...
நாம்
மீன்களின் கூட்டம் அல்ல
நானும்,
நீயும்,
அவனும்
தமிழர்கள் தான்.....
உனது
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....

Tuesday, June 2, 2009

அமைதியின் அர்த்தம்

அண்மையில் வாசிக்க கிடைத்த ஒரு குட்டிக்கதையும் அமைதியின் அர்த்தமும்.

அரசன் ஒருவன் ஒரு தனது நாட்டிலுள்ள ஓவியர்களுக்கெல்லாம் ஒரு போட்டிஅறிவித்தான், அமைதி என்று தலைப்பிட்டு அதற்க்கு ஏற்றவாறு யார் ஓவியம்வரைகிரார்களோ அவர்களுக்கு பரிசு என்று.

பல ஓவியர்கள் போட்டியில் பங்கு பற்றினர். அரசனும் ஒவ்வொரு ஓவியமாகபார்த்துக்கொண்டு வந்தான் , இறுதியில் அவனுக்கு இரண்டு ஓவியங்களைபிடித்திருந்தது. ஆனால் ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேண்டும் ஆகவேதிரும்பவும் அவ்வோவியங்களை பார்த்தான்.

முதலாவது ஓவியம் - இதிலே ஒரு சலனமற்ற குளம், சுற்றிவர எந்தவிதஆர்ப்பாட்டமுமில்லாத மலைத்தொடர், மரங்கள் , மேலே நீல வானம் அதிலேஇடையிடையே வெண்முகில்கள். பார்த்தவுடனே அனைவரையும் கவரும்விதத்தில் இருந்தது அவ்வோவியம்.

இரண்டாவதோ - இதிலும் மலை; ஆனால் அத்தனை அழகான மலை இல்லை , வானமும் மிகவும் கோவத்துடன் இருந்தது கருமுகில் சூழ்ந்து மலைபெய்துகொண்டிருந்தது, மலையிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி. மொத்தத்தில் இத்தனைபார்க்கும் போதே காதில் இரைச்சல் கேக்கும் போல் இருந்தது . ஆனால்அப்போதுதான் அரசன் அவ்வோவியத்தை கூர்ந்து பார்த்தான். அதிலே அந்தநீர்வீழ்ச்சிக்கு அருகிலே ஒரு சிறிய மரம் இருந்தது அதிலே ஒரு குருவியின் கூடுஇருந்தது, கூட்டிலே ஒரு தாய்க்குருவி எந்தவித சலனமுமில்லாமல்அமைதியாக இருந்தது.

அரசனும் அந்த ஓவியத்திற்கே பரிசினை வழங்கிவிட்டு இவ்வாறு கூறினான்

"அமைதி என்பது சத்தமும் ஆர்ப்பாட்டமும் கஷ்டங்களும் இல்லாத இடத்தில்இல்லை, இவ்வளவும் நிறைந்த அந்த இடத்திலே எந்தவித பயமோ சலனமோஇன்றி இருக்கும் இதயத்தில்தான் இருக்கிறது"

நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா!!!

வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.

பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !

அம்மா.

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

முட்டை மந்திரம்..

சூடான் நாட்டின் ராஜாவிற்கு அழகான மகன் பிறந்தான்.அவன் பெயர்அனந்தா.மகன் பிறந்த கொஞ்ச நாட்களில் ராஜா நோய்வாய்ப்பட்டுஇறந்துபோனார்.இளவரசன் அனந்தாவை வளர்க்கும் முழு பொறுப்பும் ராணிக்குவந்தது. அனந்தா திறமையான வீரனாக வளர்ந்தான்.ராணிக்கு ஒரே ஒரு கவலைதான். அனந்தாவிற்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவேண்டும். ஏனெனில்ராஜாவிற்கு தீய நண்பர்களின் சகவாசம் கிடைத்து, குடி போதைக்கு அடிமையாகிநோய்வாய்ப்பட்டு இறந்தார். அதனால் மேலும் கவலையுற்றார் ராணி. அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரத்தை” சொன்னார் ராணி. யார்உனக்கு நண்பர்களாக இருக்க விருப்பப்படுகின்றாயோ, அவர்களை அழைத்துமூன்று அவித்த முட்டைகளை விருந்தாக கொடு. அவர்கள் எப்படிஉண்கிறார்களோ அதன்படியே அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம்என்றார்.

முதலில் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்பயிற்சிகளை மேற்கொண்டனர்.அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்றுமுட்டைகளை கொடுத்தான். அவன் ஒரு முட்டையை சாப்பிட்டு, இரண்டுமுட்டைகளை அனந்தாவிற்கு கொடுத்தான். அவன் அம்மாவிடம் இந்தநிகழ்ச்சியை சொன்னதற்கு “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டுமுட்டைகளை கொடுத்துள்ளான்” இவன் நெருங்கிய நட்பு வேண்டாம்என்றார்கள்.
சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளை படிக்கும் போது வியாபாரி மகன்ஒருவனின் நட்பு கிடைத்தது. அவனையும் அழைத்து மூன்று முட்டைகளைகொடுத்தான் அனந்தா. அவன் மூன்று முட்டைகளையும் முழுங்கினான். அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பும் வேண்டாம்என்றார் ராணி.மற்றொரு மந்திரி மகன் முட்டை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் உன்னை மதிக்கவேயில்லை பார் என்று அவன் நட்பையும் வேண்டாம்என்றாள் ராணி.
ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான் அனந்தா. வேட்டையாடிவிட்டுஅரண்மனை திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. அதனால் காட்டிலே இருக்கும்விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகுவெட்டியின் மகன்விநோதன் இவன் வயதை ஒத்தவன். இருவரும் இரவு நீண்ட நேரம்பேசிக்கொண்டு இருந்தனர். மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடசென்றான்.
விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் அனந்தா. அவனுக்கும் மூன்றுமுட்டைகளை தட்டில் வைத்தான். விநோதன் எழுந்து மேஜை மீது இருந்தகத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரைஒன்றரை முட்டை சாப்பிடலாம் என்றான். அனந்தாவிற்கு ஆனந்தம். உடனேவிநோதனின் நட்பை தாயிடம் தெரிவித்தான். தாய் மகிழ்ந்தாள். அவன்விறகுவெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னை சமமாக நினைத்ததன் மூலம்உன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும்எதிர்பார்க்கவில்லை. இது தான் நட்பில் முக்கியம்.

இளவரசன் அனந்தா போர் முறைகள், கல்வி, அரசியல் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றான். பெரியவனானதும் நாட்டின் அரசனாக பொறுப்பேற்றான். விநோதன்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். கடைசி வரை நல்ல நண்பர்களாகவிளங்கினார்கள்.

Monday, June 1, 2009

சொல்வதற்கு என்ன இருக்கிறது? அம்மா

வாழ்க்கை

நினைத்தது போல் அழகாக இல்லை

வானவில்லின் நிறங்களைப்போல

கைகளுக்கு அகப்படாமல்

சிறகடித்துப் பறக்கும்

வண்ணத்துப் பூச்சிகளைப்போல்

வாழ்க்கை ஒன்றும் அழகாக இல்லை

அருவருப்பான மண் புழுவைப் போல்

சொத சொதவென நாட்கள் நகர்கின்றது

அடுப்படியில் படுத்துறங்கிய பூனை

சோம்பல் முறித்தெழுவதைப்போல்

சமயத்தில் வரும் உற்சாகம்

நகரத்தின் சந்தடியில்

அடிபட்டுப் போய் விடுகிறது

முகவரியிட்ட கடிதங்களை

தபால் பெட்டியில்

சேர்த்து விட்டு காத்திருக்கும்

நம்பிக்கைகள்கூட இல்லை

உலகப் புகழ்பெற்ற

நயாகரா வீழ்ச்சியை பார்ப்பதற்கும்;

கடிதங்களை எழுதவும் மட்டுமல்ல

ஒரு தலையசைப்புக்குக்கூட

சிறு அவகாசம் இல்லை.

நட்பு முத்திரைகள் சேர்க்கவும்

முத்தமிடவும்தான்

உறவுகளை இழந்த மனத்தவிப்பு

மட்டும் எஞ்சியிருக்கிறது

சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அம்மா

பூக்களைப் பார்க்கின்ற போதும்

புன்சிரிக்க முடிவதில்லை.

இருந்தும் நம்பிக்கை மட்டும்

இதயத்தில் எட்டி பார்ப்பதால்

தொடர்கிறது வாழ்க்கை

பார்த்திப வருடத்தின் இறுதியிலும் கூட